×

ஓசி பிரியாணி தராத முன்விரோதம் காரணமாக ஓட்டல் உரிமையாளருக்கு சரமாரி வெட்டு: மருத்துவமனையில் அனுமதி

திருவள்ளூர்: பூந்தமல்லியை அடுத்த திருமழிசையை சேர்ந்தவர்கள் அருணாச்சல பாண்டியன், மகாராஜன், கணேசன் 3 பேரும் சகோதரர்கள். இவர்கள்  திருமழிசை மெயின் ரோட்டில் கஸ்தூரி பவன் என்கிற ஹோட்டலை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 18 ம் தேதி மதியம் 2.30 மணியளவில் மோட்டார் சைக்கில்களில் வந்த நபர்கள் எங்களை அண்ணன் எபி ஓசியில் பிரியாணி வாங்கி வருமாறு அனுப்பி வைத்தார் என்று கூறியுள்ளனர். அதற்கு அருணாச்சல பாண்டியன் பிரியாணி தீர்ந்து விட்டதாக தெரிவித்துள்ளார். அண்ணன் எபி கேட்டும் பிரியாணி இல்லை என்று கூறுகிறாய் என்று மிரட்டிவிட்டு, உன்னுடைய செல்போன் எண்ணை கொடு எங்கள் அண்ணனையே உன்னிடம் பேச சொல்கிறோம் என்று கூறி தகராறு செய்துவிட்டு புறப்பட்டுச் சென்று விட்டனர்.

பிறகு அருணாச்சல பாண்டியன் வீட்டிற்கு சென்று  ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது  அவரது செல்போனுக்கு  ஒருவர் போன் செய்துள்ளார். அருணாச்சல பாண்டியன்  ஓய்வு எடுத்துக் கொண்டிருந்ததால் அவரது மனைவி செல்போனை எடுத்து பேசியுள்ளார். உன்னுடைய கணவர் எங்கே என்றும் இன்னும் அரை மணி நேரத்தில்  உங்களது ஓட்டலும், வீடும்  சின்னா, பின்னமாகி விடும் என்று  மிரட்டி விட்டு செல்போனை  துண்டித்துள்ளார். இந்த சூழ்நிலையில் மீண்டும் மாலை 4 மணியளவில் மோட்டார் சைக்கில்களில் திரும்பி வந்த 8 நபர்கள் கஸ்தூரி பவன் ஹோட்டலுக்கு வெளியே நின்று கொண்டு ஹோட்டல் மீதும், சிறிது தூரத்தில் உள்ள அருணாச்சல பாண்டியன் வீட்டின் மீதும் பெட்ரோல் குண்டுகளை எடுத்து வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனால் இரண்டு இடங்களிலும் தீ பிடித்துக் கொண்டு எரிந்தது. உடனடியாக அங்கு இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து அருணாச்சல பாண்டியன் (40) திருமழிசை உடையவர் கோயில் பகுதியைச் சேர்ந்த ஜான்சன் மகன் ஏபி என்கிற எபினேசர் என்கிற ராஜா (34) மற்றும் 8 பேர் மீது வெள்ளவேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.  
போலீஸ் எஸ்பி உத்தரவின்பேரில் டிஎஸ்பி தலைமையில் வெள்ளவேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமழிசை  கஸ்தூரிபாய் தெருவைச் சேர்ந்த  கணேசன் மகன் சதீஷ் (22)  என்பவரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில்  சதீஷ் செல்போனிலிருந்து தான் அருணாச்சல பாண்டியன் செல்போனுக்கு எபி தொடர்புகொண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் திருமழிசை சாட்டிலைட் சிட்டியில் தலைமறைவாக இருந்த திருமழிசை உடையவர் கோயில் பகுதியைச் சேர்ந்த சதீ் (20), வேலன் (20) ஆகிய 2 பேரையும் சிக்கராயபுரம், கல்குவாரியில் தலைமறைவாக இருந்த  திருப்பதி (21), கிறிஸ்டோபர் (20), கஸ்தூரிபாய் தெருவைச் சேர்ந்த பழனி (20), நசரத்பேட்டையை சேர்ந்த பரத்ராஜ் (21) ஆகிய 4 பேரையும் கைது செய்து 6 பேரையும் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக இருந்த எபி என்கிற எபினேசர் என்கிற ராஜாவை வெள்ளவேடு போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

இந்நிலையில் பாதிரிவேடு அருகே வயல்வெளியில் மறைந்திருந்த எபி என்கிற எபினேசர் என்கிற ராஜாவை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பிறகு அவரை பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர் ஏற்கனவே பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டதால் அவரை ஒரு வருடம் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க  கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டார். அதன் பேரில் எபி என்கிற எபினேசர் என்கிற ராஜாவை குண்டர் தடுப்புச் சட்டத்தில் புழல் மத்திய சிறையில் அடக்கப்பட்டார்.

இந்நிலையில் முன் விரோதம் காரணமாக எபி என்கிற எபினேசர் என்கிற ராஜாவின் கூட்டாளிகள் 3 பேர் நேற்றுமுன்தினம்  இரவு கஸ்தூரி பவன் ஹோட்டலுக்கு சென்று அங்கு ஹோட்டலில் உட்கார்ந்து கொண்டிருந்த உரிமையாளர் மகாராஜனை வெட்ட முயற்சி செய்துள்ளனர் அங்கிருந்து அவர் ஓட்டலில் இருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். அப்போது இவர்கள் பின் தொடர்ந்து ஓட, சென்று சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனால் படுகாயம் அடைந்த மகாராஜனை உடனடியாக உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வெள்ளவேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹோட்டல் உரிமையாளரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்ட 3 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags : OC Biryani ,
× RELATED ஓசி பிரியாணி தராத முன்விரோதம் காரணமாக...