திருவொற்றியூர் சரகத்தில் இருந்த 30 ரேஷன் கடைகள் பெரம்பூருக்கு மாற்றம்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டல உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை உதவி ஆணையர் சரகத்தில் திருவொற்றியூர், மாதவரம் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கி 134 நியாய விலை கடைகள் இயங்கி வந்தது. இதில் குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை தொடர்பான குறைபாடுகளுக்கு திருவொற்றியூருக்கு வரவேண்டி உள்ளதால் சிரமப்பட்டனர்.

இதையடுத்து, திருவொற்றியூர் மண்டல உணவு பொருள் வழங்கல் உதவி ஆணையர் சரகத்திலிருந்து பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட 30 நியாய விலை கடைகள் பெரம்பூர் மண்டல உணவு வழங்கல் உதவி ஆணையர் சரகத்திற்கு மாற்றப்பட்டு நேற்று முன்தினம் (பிப்.1ம் தேதி) முதல்  செயல்பட துவங்கியுள்ளது. இதனால் எருக்கஞ்சேரி, கண்ணதாசன் நகர், முத்தமிழ் நகர், காந்தி நகர், ஆர்.வி.நகர், சின்னாண்டி மடம் மற்றும் கொடுங்கையூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் நியாய விலை கடைகளுக்குரிய கோரிக்கைகள் மற்றும் மனுக்கள் தொடர்பான விவரங்களுக்கு பெரம்பூர் மண்டல உணவு பொருள் அலுவலகத்தை அணுகுமாறு குடும்ப அட்டைதாரர்களுக்கு திருவொற்றியூர் மண்டல உதவி ஆணையர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: