×

திருமங்கலம் காமராஜபுரம், கற்பகம் நகர் பகுதியில் வாக்குசாவடி மையம் அமைக்க கோரிக்கை

திருமங்கலம்: திருமங்கலத்தின் புறநகர் பகுதிகளான காமராஜபுரம், கற்பகம் நகர், ஆறுமுகம் ரோடு பகுதியை சேர்ந்த வாக்காளர்கள் தங்களது பகுதியில் வாக்குசாவடி மையம் அமைக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். திருமங்கலம் ரயில்வே ஸ்டேசனை தாண்டியுள்ள புறநகர் பகுதிகளான பிசிஎம்நகர், கற்பகம்நகர், காமராஜபுரம் வடபகுதி, ஆறுமுகம்ரோடு, சோனைமீனா நகர் உள்ளிட்ட பகுதிகள் நகராட்சி எல்லைக்குள் வருகின்றன. அதாவது நகராட்சியின் 21, 22, 26 மற்றும் 27வது வார்டுகள் இந்த பகுதிகளில் வருகின்றன. இதில் 21வது வார்டில் சுமார் 1320 வாக்காளர்களும், 22வது வார்டில் சுமார் 1150 வாக்காளர்களும், 26வது வார்டில் சுமார் 1330 வாக்காளர்களும், 27வது வார்டில் 1450 வாக்காளர்களும் உள்ளனர். சுமார் 5 ஆயிரம் வாக்காளர்களை கொண்ட இந்த பகுதி வாக்காளர்கள் வரும் நகராட்சி தேர்தலில் வாக்களிக்க 1 கி.மீ தூரமுள்ள பிகேஎன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்குசாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் ரயில்கே கேட்டினை கடந்து சென்றுதான் பிசிஎம்நகர், காமராஜர்புரம், கற்பகம்நகர் பகுதி மக்கள் வாக்களிக்கவேண்டியுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் பிகேஎன் பள்ளியும் சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் பஸ்ஸ்டாண்ட் அருகேயுள் அல்அமீன் பள்ளியிலும் இவர்களுக்கு வாக்குசாவடி மையமாக அமைக்கப்படுகிறது. வாக்காளர்கள் வாக்களிக்கும் மையங்கள் மிகவும் அருகேயே இருக்க வேண்டும் என்ற விதியை மீறி இந்த பகுதி மக்கள் நீண்ட தூரம் கடந்து சென்று ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிக்க வேண்டியுள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் அரசு பள்ளி, அங்கன்வாடி மையங்கள் இல்லாததால் வாக்குசாவடி மையம் அமைக்க அதிகாரிகள் மறுப்பதாக தெரிவித்தனர். வருங்காலங்களில் நடைபெறும் தேர்தல்களில் தங்களது பகுதிக்குள்ளேயே வாக்குசாவடி மையம் அமைக்க தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Tags : Thirumangalam Kamarajapuram ,Karbagam Nagar ,
× RELATED காட்பாடியில் மாயமான வடமாநில சிறுமி...