×

இரவு நேர ஊரடங்கு ரத்து எதிரொலி குமரியில் 22 நாட்களுக்கு பிறகு நள்ளிரவு வரை இயங்கிய ஓட்டல்கள்

நாகர்கோவில், ஜன.29 : அனைத்து நாட்களிலும் இனி வழிபாட்டு தலங்களில் மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற உத்தரவை தொடர்ந்து 3 வாரங்களுக்கு பிறகு நேற்று வெள்ளிக்கிழமையில் பக்தர்கள் பெருமளவில் கோயில்களில் திரண்டனர். இரவு நேர ஊரடங்கு ரத்து அறிவிப்பால், ஓட்டல்களும் நள்ளிரவு வரை இயங்கின. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு மற்றும் தினமும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்தன.

இதே போல் வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. சனி, ஞாயிறு சுற்றுலா தலங்களிலும் மக்கள் அனுமதிக்கப்பட வில்லை. இந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் மேற்கொள்வது தொடர்பாக நேற்று முன் தினம், முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் படி இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு ஆகியவை ரத்து செய்யப்பட்டன. நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது. நாளை (ஞாயிறு) முழு ஊரடங்கு கிடையாது.

இதே போல் வாரத்தில் எல்லா நாட்களிலும் வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதிக்கான உத்தரவும் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து  3 வாரங்களுக்கு பின்,  வெள்ளிக்கிழமையான நேற்று கோயில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். குமரி மாவட்டத்திலும் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயில், நாகர்கோவில் நாகராஜா கோயில், கிருஷ்ணன்கோவிலில் உள்ள கிருஷ்ணசுவாமி கோயில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில், வடிவீஸ்வரம் இடர்த்தீர்த்த பெருமாள் கோயில், திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோயில், திங்கள்நகர் ராதாகிருஷ்ணன் கோயில், திருவட்டார் ஆதிகேவசபெருமாள் கோயில் உள்பட முக்கிய கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இது குறித்து பக்தர்கள் கூறுகையில், வாரத்தில் வெள்ளிக்கிழமைகளில் கோயிலுக்கு வராமல் இருந்தது, மனதளவில் கஷ்டமாக இருந்தது. தற்போது கட்டுப்பாடுகளை நீக்கி தரிசனம் செய்ய அனுமதி அளித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றனர். கோயில்களுக்கு வந்த பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டனர். இதே போல் நேற்று வெள்ளிக்கிழமை பள்ளிவாசல்களிலும் தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். நாகர்கோவிலில் வடசேரி, மணிமேடை, இளங்கடை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம் பள்ளிவாசல்களில் நடைபெற்ற தொழுகையில் எராளமானவர்கள் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி பங்கேற்றனர்.

இரவு நேர ஊரடங்கும் நேற்று முதல் ரத்து செய்யப்பட்டது. கடந்த 6ம் தேதியில் இருந்து இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்தது. நேற்று ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, சுமார் 22 நாட்களுக்கு பிறகு நேற்று இரவு 10 மணிக்கு பின்னரும் நாகர்கோவிலில் வடசேரி, மீனாட்சிபுரம் பகுதிகளில் ஓட்டல்கள் திறந்து இருந்தன. பஸ் நிலையங்களிலும் கடைகள் திறந்து இருந்தன. பயணிகள் நடமாட்டமும் அதிகமாக இருந்தது. இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஓட்டல் தொழிலாளர்கள், வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Echo Kumari ,
× RELATED 113 டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் மூடல் ...