×

113 டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் மூடல் எதிரொலி குமரியில் ஒரே நாளில் ₹6 கோடிக்கு மது விற்பனை

நாகர்கோவில், பிப். 18:   நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி நேற்று முதல் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று முன்தினம் ஒரேநாளில் சுமார் R6 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.   தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நாளை(19ம் தேதி) நடக்கிறது.  தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடைபெறும் பகுதிகள் மற்றும் அதனை சுற்றி 5 கி.மீ வரையுள்ள பகுதிகளில் 17ம் தேதி முதல் நாளை (19ம் தேதி) வரையும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான பிப்ரவரி 22ம் தேதி ஆகிய 4 நாட்கள் டாஸ்மாக் சில்லறை மதுபான கடைகள் மற்றும் உணவு விடுதியுடன் கூடிய மதுபான கூடங்கள் செயல்படாது என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. குமரி மாவட்டத்தில்  ஒரு மாநகராட்சி, 4 நகராட்சிகள், 51 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இந்த பகுதிகளில் 73 டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் உணவு விடுதியுடன் கூடிய 34 மதுபான கூடங்கள் செயல்படு கின்றன.

குமரி மாவட்டத்தில்  அரசின் உத்தரவு படி தேர்தல் நடைபெறும் பகுதியில் இருந்து  5 கிலோ மீட்டருக்குள்  ஊராட்சி பகுதிகள் வந்து விடுகிறது. இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள 113 டாஸ்மாக் கடைகளும் நேற்று(17ம்தேதி) மூடப்பட்டது . நாளை (19ம் தேதி) வரை 3 நாட்கள் மூடப்படுகிறது. இதுபோல் குமரி மாவட்டத்தில் 22ம் தேதி வாக்கு எண்ணும் மையங்கள் 8 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து 5 கிலோ மீட்டருக்குள் வரும் மொத்தம் 73 கடைகள் 22ம் தேதி வாக்கு எண்ணும் அன்று அடைக்கப்பட்டு இருக்கும். மற்ற 40 கடைகள் வழக்கம்போல் செயல்படும். நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.  இன்றும், நாளையும் அனைத்து டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படவுள்ளது. மேலும் 22 ம்தேதி 73 டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படுகிறது. டாஸ்மாக் கடைகள் 4 நாட்கள் அடைக்கப்படுவதால் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள்  அதிக அளவு மதுபானங்களை வாங்கி சென்றனர்.  குமரி மாவட்டத்தில் உள்ள 113 டாஸ்மாக் கடைகளிலும் வழக்கமான நாட்களில்  சராசரியாக  R3 கோடிக்கு மது விற்பனையாகும். ஆனால் தொடர்ந்து 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், நேற்று முன்தினம் வழக்கமாக விற்பனையாகும் மதுவில் இருந்து இரட்டிப்பு அளவு சுமார் ₹6 கோடி அளவிற்கு மது விற்பனையாகியுள்ளது என டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags : Tasmac ,Echo Kumari ,
× RELATED டாஸ்மாக் கடைகளில் 44% பீர் விற்பனை உயர்வு