×

அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை வளர்ச்சி திட்ட பணிகள்

அரியலூர், ஜன.21: அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் கிராமங்களில் உள்ள பொதுமக்களின் தேவைகள் அறிந்து, வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்யப்பட்டது.இதில், கருப்பிலாக்கட்டளை ஊராட்சி வண்ணாரப்பேட்டையில் தமிழ்நாடு கிராம ஊரக வளர்ச்சி கிராம சாலை மேம்பாடுத் திட்டத்தின் கீழ் ரூ.45.40 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட மேலக்கருப்பூர்-ஏலாக்குறிச்சி-கல்லக்குடி-வண்ணாரப்பேட்டை முதல் பாப்பாங்குளம் சாலை பலப்படுத்துதல் பணி, அருங்கால் ஊராட்சி, அருங்காலில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.6.53 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தனிநபர் கிணறு கட்டுதல் பணியை கலெக்டர் ரமண சரஸ்வதி ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, முடிவுற்ற சாலை பணியினை வரும் 1.5 கி.மீட்டர் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டு, 4 இடங்களில் சாலையின் அகலம் ஒரே அளவாக உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார். மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை முறையாக பராமரித்து, மழைநீரை சேகரித்து, நிலத்தடி நீர்மட்டம் உயர வழிவகை செய்யவும், தனிநபர் கிணறு பணியினை சரியான அளவுகளில் மேற்கொள்ளவும், அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளை உரிய முறையில் பராமரிக்கவும், பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை முறையாக குளோரிநேசன் செய்யவும், முடிவுற்ற வளர்ச்சிப் பணிகளை முறையாக பராமரிப்பதுடன், நடைபெறும் பணிகளை தரமான கட்டுமானப்பொருட்களை கொண்டு கட்டி முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அகிலா, அன்புசெல்வன், உதவி செயற்பொறியாளர் சீதாலெட்சுமி, உதவிப்பொறியாளர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags : Ariyalur District ,
× RELATED அரியலூர் மாவட்டம் நின்னியூர் காலனி...