×

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மஞ்சுவிரட்டிற்கு தயாராகும் சிராவயல்திடல், மேடை அமைக்கும் பணி தீவிரம்

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே சிராவயலில் 16ம் தேதி நடக்க உள்ள மாபெரும் மஞ்சுவிரட்டிற்கு திடலில் தடுப்புகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. திருப்புத்தூர் அருகேயுள்ள சிராவயலில் பாரம்பரியமாக மஞ்சுவிரட்டு போட்டி ஆண்டு தோறும் தை மாதம் மாட்டுப்பொங்கல் மறுநாள் நடைபெறும். இவ்விழாவிற்காக தொழுவின் முன்பகுதியில் இருபுறங்களிலும் சுமார் 300 மீட்டர் தூரம் வரை கல்லுக்கால் வைத்து ஊன்றி கம்புகளால் தடுப்பு அமைப்பது, நிகழ்ச்சி நடைபெறும் மேடை சீரமைப்பது, தொழுவின் முன்பகுதியில் கற்களால் சுற்றுச்சுவர் அமைப்பது, மஞ்சுவிரட்டு பொட்டலை சுத்தம் செய்வது உள்ளிட்ட பணிகளை கிராமத்தினர் செய்து வருகின்றனர்.

மஞ்சுவிரட்டு நடைபெறும் ஜன.16ம் தேதியன்று காலை 11 மணிக்கு கிராமத்தில் உள்ள பெரியநாயகி அம்மன், தேனாட்சி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். தொடர்ந்து முன்னோர் வழிபாடு செய்து நாட்டார்களை அழைத்துக் கொண்டு வாணவேடிக்கை, மேளதாளத்துடன் மஞ்சுவிரட்டு தொழுவிற்கு கிராமத்தினர் வருவார்கள். அதனை தொடர்ந்து தொழுவில் உள்ள அனைத்து மாடுகளுக்கும் வேஷ்டி, துண்டு அணிவித்து மரியாதை செய்யப்படும். கோயில் காளைகளை அவிழ்த்துவிட்ட பின்னர் மஞ்சுவிரட்டு காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்படும். இந்த மஞ்சுவிரட்டில் சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான காளைகள் பங்கேற்கும். இந்த மஞ்சுவிரட்டை காண தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வார்கள்.

Tags : Manjuvirat ,Pongal festival ,
× RELATED மஞ்சுவிரட்டு நடத்திய 6 பேர் மீது வழக்கு