×

திருப்புத்தூர் அருகே மஞ்சுவிரட்டில் 10 பேர் காயம்

திருப்புத்தூர், ஜன. 1: திருப்புத்தூர் அருகே மஞ்சுவிரட்டில் மாடுகள் முட்டியதில் 10 பேர் காயமடைந்தனர். அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே ஊர்க்குளத்தான்பட்டியில் உள்ள கருப்பர் மற்றும் முனீஸ்வரர் கோயிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு ஆண்டு தோறும் மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு நேற்று ஊர்க்குளத்தான்பட்டி அருகேயுள்ள அரசு பொட்டலில் பல்வேறு கிராமங்கள் மற்றும் ஊர்களில் இருந்து அலங்கரித்து கொண்டுவரப்பட்ட சுமார் 200க்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டு காளைகளை ஆங்காங்கே கட்டுமாடுகளாக அவிழ்த்துவிடப்பட்டன.

இவற்றை ஏராளமான மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் பிடித்தனர். இந்த மஞ்சுவிரட்டை காண சுற்றி வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் பொட்டலில் திரண்டிருந்தனர். இதில் மாடு முட்டியதில் செல்லியம்பட்டியைச்சேர்ந்த குறள்(20), கருகாலங்குடியை சேர்ந்த சிவசக்தி(18), தெற்கு ஒத்தகோட்டையை சேர்ந்த முருகானந்தம் (28), அறந்தாங்கியை சேர்ந்த கார்த்திக்(24), திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கார்த்திக்(21), மானாமதுரை அருகே கால்பிரவைச்சேர்ந்த ரெங்கேஸ் (24) உள்ளிட்ட 10 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் திருப்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்நிலையில் அரசு அனுமதியின்றி மஞ்சு விரட்டு நடத்தியதாக நெடுமரம் விஏஓ கோகிலவாணி கொடுத்த புகாரின் பேரில், ஊர்க்குளத்தான்பட்டியை சேர்ந்த 6 பேர் மீது கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Manchurian ,Tiruputhur ,
× RELATED விருப்ப ஓய்வு பெற மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு நோட்டீஸ்