×

தராசுகள் முத்திரையிடுவது குறித்து ஆய்வு 22 இறைச்சி கடைகள் மீது நடவடிக்கை

சேலம்: சேலம் மாவட்டத்தில் தராசுகள் முத்திரையிடுவது குறித்து ஆய்வு மேற்கொண்ட தொழிலாளர் நலத்துறையினர், அஜாக்கிரதையாக செயல்பட்ட 22 இறைச்சி கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டனர். சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் எடையளவு குறித்து புகார் எழுந்தது. இதனையடுத்து மாவட்டம் முழுவதும், தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவின் பேரில், சென்னை சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி சாந்தி அறிவுறுத்தலின் பேரில், கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் பொன்னுசாமி மற்றும் சேலம் தொழிலாளர் துணை ஆணையர் ரமேஷ் வழிகாட்டுதல் படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முத்து தலைமையில், உதவி ஆய்வாளர்கள் அன்பழகன், கிருபாகரன், வாசுகி, சீனிவாசன், இளையராஜா, அருண்குமார், சிவக்குமார், சங்கர் மற்றும் முத்திரை ஆய்வர்கள் அருண், சுதா, சந்திரன், குருபிரசாத் ஆகியோர் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். இக்குழுவினர் சேலம் மாநகரம், ஆத்தூர் மற்றும் மேட்டூர் பகுதிகளில் உள்ள 51 இறைச்சி, மீன் மற்றும் கோழிக்கறி கடைகளில், அங்கு பயன்படுத்தப்படும் தராசுகள் முத்திரையிடப்பட்டு பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்தனர்.

இதில், 2 கடைகளில் தராசுகள் முத்திரையிடப்படாமல் இருந்ததையடுத்து, அவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 20 கடைகளில் இருந்த தராசுகள் முத்திரையிடப்பட்டிருந்தும், அதற்கான முத்திரை சான்று பொதுமக்களுக்கு தெரியும்படி வெளிக்காட்டி வைக்கவில்லை. இதனையடுத்து, இந்த 22 கடைகளின் உரிமையாளர்கள் மீது சட்டமுறை எடையளவு சட்ட பிரிவுகளின் கீழ் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேபோல், அனைத்து இறைச்சி மற்றும் பூக்கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு, முத்திரையிடப்படாத தராசுகள் உபயோகப்படுத்தக்கூடாது, அதன் முத்திரை சான்றை பொதுமக்கள் பார்க்கும் வகையில் வெளிக்காட்டி வைக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், முத்திரையிடப்படாத தராசுகள் உபயோகப்படுத்தினால் ₹5,000-மும், முத்திரை சான்றை பொதுமக்கள் பார்க்கும் வகையில் வெளிக்காட்டி வைக்காவிட்டால் ₹500ம், அபராதமாக விதிக்கப்படும் என தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முத்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags :
× RELATED ஒரு கிலோ பாக்கு ₹900க்கு விற்பனை