×

காலிங்கராயன் பாசன பகுதிகளில் 2 இடங்களில் அரசின் நேரடி கொள்முதல் மையம்

ஈரோடு, டிச. 23: ஈரோடு காலிங்கராயன் பாசன பகுதிகளில் 2 இடங்களில் அரசின் நேரடி கொள்முதல் மையங்களை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று துவக்கி வைத்தார்.ஈரோடு மாவட்டம் காலிங்கராயன் பாசன பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல் பயிர்கள் கதிர்விட்டு அறுவடைக்கு தயாராகியுள்ளன. இதைத்தொடர்ந்து விவசாயிகள் அரசின் சார்பில் நெல் கொள்முதல் மையத்தை துவங்க தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்தனர்.இதைத்தொடர்ந்து, ஈரோடு காலிங்கராயன் பாசன பகுதியில் ஈரோடு வைராபாளையம், எஸ்.பி.அக்ரஹாரம் ஆகிய 2 இடங்களில் முதற்கட்டமாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் அரசின் நேரடி நெல் கொள்முதல் மையம் அமைக்கப்பட்டது.இதன் துவக்க விழா நேற்று நடந்தது. விழாவுக்கு ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு, நெல் கொள்முதல் மையத்தினை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

இந்த நெல் கொள்முதல் மையங்களில் ‘ஏ’ கிரேடு ரக நெல் குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ.1,960 மற்றும் ஊக்கத்தொகை ரூ.100 என மொத்தம் ரூ.2,060க்கும், பொது ரக நெல் குவிண்டால் குறைந்தபட்ச ஆதார விலை ரூ.1,940 மற்றும் ஊக்கத்தொகை ரூ.75 என மொத்தம் ரூ.2,015க்கும் கொள்முதல் செய்யப்பட உள்ளது. விவசாயிகள் நடப்பு பருவத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லினை நேரடியாக அரசின் கொள்முதல் மையத்திற்கு கொண்டு வந்து, அரசு நிர்ணயிக்கப்பட்ட வரன்முறைக்கு உட்பட்ட 17 சதவீத ஈரப்பத விகிதாச்சாரத்தில் கொள்முதல் செய்யப்படும்.அவை மின்னணு தராசு மூலம் துல்லியமாக எடையிட்டு மின்னணு பரிவர்த்தனை மூலம் (இசிஎஸ்) விவசாயிகள் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், ஈரோடு ஆர்டிஓ பிரேமலதா, மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், வேளாண்மை இணை இயக்குநர் சின்னசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகேசன், நுகர்பொருள் வாணிப கழக ஈரோடு மண்டல மேலாளர் முருகேசன், தரக்கட்டுப்பாட்டு துணை மேலாளர் சக்தி, ஆர்டிஓ பிரேமலதா, மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், உதவி ஆணையாளர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Government Direct Purchasing Center ,Kalingarayan Irrigation Areas ,
× RELATED அரசு நேரடி கொள்முதல் நிலையம் துவக்கம்: எம்எல்ஏ திறந்து வைத்தார்