×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராம எல்லைகள் சீரமைப்பு கருத்துகேட்பு கூட்டம்: கலெக்டர் அறிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை. தமிழக சட்டப்பேரவையில் 2021-2022 நிதி ஆண்டுக்கான வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானிய கோரிக்கையின்போது, பதிவுத்துறையில் சில சார்பதிவக எல்லைகளில் ஒரு முக்கிய வருவாய் கிராமம் ஒரு சார்பதிவாளர் அலுவலகத்திலும், அதே வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட குக்கிராமம் வேறொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் உள்ள நிலையை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் தானியங்கி பட்டா மாற்றம் உள்பட பதிவுத்துறை வருவாய்துறை ஒருங்கிணைந்த செயல்பாடுகளுக்கு உள்ள இடையூறு களையப்பட்டு, ஒரு வருவாய் கிராமம் முழுவதையும் ஒரே சார்பதிவக எல்லைக்குள் கொண்டு வரும் வகையிலும் கிராமங்கள் அனைத்தும் அருகில் உள்ள சார்பதிவக எல்லைக்குள் வரும் வகையிலும் சார்பதிவக எல்லைகள் சீரமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனை  நடைமுறைப்படுத்தும் வகையில், காஞ்சிபுரம் வருவாய் மாவட்டத்துக்கு உட்பட்ட குறிப்பிட்ட வருவாய் கிராமத்துடன் உத்தேசமாக இணைக்கப்படவேண்டிய குக்கிராமங்களின் பட்டியல்கள் சம்பந்தப்பட்ட சார்பதிவகங்களில் ஒட்டி விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி சார்பதிவக கிராம எல்லை மறுசீரமைப்பு தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில், நாளை மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது. எனவே தொடர்புடைய கிராம பொதுமக்கள் இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு: தமிழ்நாடு மறுவரையறை ஆணைய தலைவர் பழனிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம் மாநகராட்சி மற்றும் 6 நகராட்சிகளின் வார்டு மறுவரையறை தொடர்பாக, தமிழ்நாடு மறுவரையறை ஆணையம் சார்பில் கருத்துக் கேட்பு கூட்டம், தாம்பரம், முத்துலிங்கம் தெரு, தாம்பரம் மாநகராட்சி கல்யாண மண்டபத்தில் நாளை காலை 11 மணிமுதல் 1 மணிவரை நடைபெற உள்ளது. எனவே, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களின் வார்டு மறுவரையறைக்கு உட்படும் தாம்பரம் மாநகராட்சி, குன்றத்தூர், மாங்காடு,  நந்திவரம் கூடுவாஞ்சேரி, பொன்னேரி, திருநின்றவூர், சோளிங்கர் ஆகிய நகராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்களது ஆட்சேபனைகள் மற்றும்  கருத்துக்களை நேரடியாக தெரிவிக்கலாம். மேலும், இதன் விவரங்களை மனுவாகவும் வழங்கலாம். இக்கூட்டத்தில், தமிழ்நாடு மறுவரையறை ஆணைய தலைவர் முனைவர் பழனிகுமார் (ஓய்வு). மறுவரையறை ஆணைய உறுப்பினர் மற்றும் செயலர் சுந்தரவல்லி, உறுப்பினர் மற்றும்  நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா, மாவட்ட மறுவரையறை அலுவலர்கள், கலெக்டர்கள் பங்கேற்க உள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

Tags : Village Boundary Alignment Reconciliation ,Kanchipuram District ,
× RELATED கோடை வெப்பத்தில் இருந்து வாகன...