×

வெளிநாட்டிலிருந்து ஈரோடு வந்த 2 பேருக்கு ஒமிக்ரான் இல்லை

ஈரோடு, டிச. 21:  வெளிநாட்டிலிருந்து  ஈரோட்டிற்கு 2 பேருக்கு சாதாரண வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்றினை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் இந்தியா வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தொற்று இல்லை என்ற பிறகே நாட்டிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். பின்னர், மாநில சுகாதாரத்துறை மூலம் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த 183 பேர் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இதில், 65 பேருக்கு ஒரு வார தனிமைக்காலம் முடிந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், ஸ்பெயின், சிங்கப்பூர் போன்ற நாட்டில் இருந்த வந்த 2 பேருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், ஒமிக்ரான் தொற்றா? என கண்டறிய பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களின் மாதிரிகள் சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆய்வின் முடிவுகள் நேற்று முன்தினம் மாலை வந்தது. அதில், இருவருக்கும் ஒமிக்ரான் இல்லை. சாதாரண வகை கொரோனா தொற்று என உறுதி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், 118 பேர் தொடர்ந்து  வீட்டு தனிமையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு இன்னும் ஓரிரு நாட்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும், என தெரிவித்தனர்.

Tags : Erode ,Omigron ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...