பெரம்பலூரில் பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல்படைக்கு ஆட்கள் தேர்வு

பெரம்பலூர்,டிச.21: பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 11 இடங்களுக்கு ஆட்கள் தேர்வுக்காக விண்ணப்பித்த 167 பேர்களில் 134 பேர் பங்கேற்றனர். பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் 220 பேர்கள் பணிபுரிய அனுமதியுள்ளது. தற்போது 209 பேர் பணிபுரிந்து வரும் நிலையில், காலியாக உள்ள 8 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 11 பணியிடங்களுக்கு புதிதாக ஆட்கள் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு, பெரம்பலூர் மாவட்ட எஸ்பி மணி உத்தரவின் பேரில், கடந்த 10,11 ஆகிய தேதிகளில் தகுதியுடையோரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

இதன்படி விண்ணப்பித்தவர்களை நேர்காணல் மற்றும் உடற்தகுதி அடிப்படையில் தேர்வு செய்வதற்காக விண்ணப்பித்த 167 பேர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு, பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேர்காணல் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. இதில் 118 ஆண்கள், 16 பெண்கள் என மொத்தம் 134 பேர்கள் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்ட எஸ்பி மணி ஆலோசனையின்படி பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பி ஆரோக்கிய பிரகாசம் தலைமையில், ஆயுதப்படை டிஎஸ்பி சுப்பாராமன், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் சப்.இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசார், நேர்கானலுக்கு வந்த 134 பேர்களில் 8 ஆண்கள், 3 பெண்கள் என 11 பேர்களை தேர்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். இதற்காக காலையில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந்தவுடன் பின்னர் உடற்தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இதில் 11 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதன் மூலம் பெரம்பலூர் மாவட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட 220 பணியிடங்களும் பூர்த்தி செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட 11 பேர்களுக்கு 45 நாட்கள் அடிப்படை பயிற்சி வழங்கப்படுமென்று காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: