தர்மபுரி, டிச.20: தர்மபுரி அவ்வையார் பள்ளியில் பழுதடைந்த கட்டிடங்கள், கலெக்டர் உத்தரவின்பேரில், நேற்று இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. திருநெல்வேலியில் அரசு உதவி பெறும் பள்ளியின் சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலியாகினர். இதனையடுத்து, தர்மபுரி மாவட்டத்தில் பழுதடைந்த கட்டிடங்களை கணக்கெடுக்கும்படி. கலெக்டர் திவ்யதர்சினி உத்தரவிட்டார். மேலும், சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வரும் தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அங்கு பயன்பாட்டில் இல்லாத பழுதடைந்த, இடிக்கப்பட வேண்டிய 2 பழைய கட்டிடங்களை பார்வையிட்டார். அப்போது, பள்ளி வளாகத்தில் பயன்படுத்தப்படாமல் உள்ள கட்டிடங்களின் விவரங்கள், உறுதித்தன்மை உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.
மிகவும் பழமையான, பயன்படுத்தப்படாமல் உள்ள கட்டிடத்தை மாணவிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், விடுமுறை தினத்தில் இடிக்க வேண்டும். பயன்படுத்தப்படாத கட்டிடங்களில் மாணவிகள் நுழையாதபடி பூட்டி வைக்க வேண்டும் என கலெக்டர் அறிவுரை வழங்கினார். இது குறித்த செய்தி தினகரன் நாளிதழில் படத்துடன் வெளியானது. இதையடுத்து, விடுமுறை தினமான நேற்று, அவ்வையார் அரசு பள்ளியில் பழுதடைந்த கட்டிடங்கள் பொக்லைன் கொண்டு இடிக்கும் பணி, தலைமையாசிரியை தெரசாள் மேற்பார்வையில் நடந்தது.