×

பயணிகளின் கோரிக்கையை ஏற்று ₹3 கோடியில் புதுப்பிக்கப்படும் மொரப்பூர் ரயில் நிலையம்

அரூர், டிச.20: பயணிகளின் கோரிக்கையை ஏற்று மொரப்பூர் ரயில் நிலையம் ₹3 கோடி செலவில் புதுப்பிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் சேலம் வழியாக ஜோலார்பேட்டை மார்க்கத்தில் சென்னைக்கு இயக்கப்படும் அனைத்து ரயில்களும், தர்மபுரி மாவட்டம் மொரப்பூரை கடந்து தான் செல்ல வேண்டும். அதேபோல், சென்னை மற்றும் வட மாநிலங்களிலிருந்து கேரளா, கோயம்புத்தூர், ஈரோடு செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் மொரப்பூர் மார்க்கமாகவே இயக்கப்பட்டு வருகின்றன. தினசரி 10க்கும் மேற்பட்ட ரயில்கள் மொரப்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன.

கடந்த 10 ஆண்டுக்கு முன்பு வரை, சென்னையில் இருந்து ரயில் மூலம் வரும் அரசியல் தலைவர்கள் மொரப்பூரில் இறங்கி தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரியில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு, மீண்டும் மொரப்பூர் வந்து சென்னை செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
நாளடைவில் போக்குவரத்து வசதி அதிகரித்த பின்பு, மொரப்பூர் ரயில் நிலையத்திற்கு வருவது குறைந்தபோதிலும், 3 மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் தற்போதும் இந்த ரயில் நிலையத்தை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், மொரப்பூர் ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது. இந்த ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி கொடுக்க வேண்டுமென பயணிகள் நலச்சங்கம் சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. அதன்படி, சுமார் ₹3 கோடி செலவில் ரயில்நிலையம் புதுக்கப்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
மொரப்பூர் ரயில் நிலையம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரே முக்கியமான ரயில் நிலையமாகும். இந்த இரு மாவட்டங்கள் மட்டுமின்றி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு அலுவலர்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த ரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். 1861ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ரயில்நிலையம், 160 ஆண்டுகளை கடந்த நிலையில் தற்போது ₹3 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. பயணிகள் தண்டவாளத்தை கடக்க லிப்ட் வசதி, வாகன நிறுத்துமிடம், மாற்றுத்திறனாளிகளுக்கு கழிவறை வசதிகள், பேருந்து நிறுத்தத்திலிருந்து ரயில்வே நிலையம் வரை சிமெண்ட் சாலை, டிஸ்பிலே போர்டு, மின்விளக்கு வசதி உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்ற வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் இப்பணிகள் நிறைவேற்றப்பட்டு பயன்பாட்டிற்கு வரும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Morappur ,station ,
× RELATED வெறுப்புணர்வை தூண்டும் வகையில்...