×

பிரதமரின் இயற்கைவழி பண்ணையம் குறித்த தேசிய இணையதள கருத்தரங்கு

அரியலூர்,டிச.20: பிரதமரின் இயற்கைவழி பண்ணையம் குறித்த தேசிய இணையதள கருத்தரங்கு நடந்தது. இதில் விவசாயிகள் பங்கேற்றனர். திருமானூர் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மாநில விரிவாக்கத் திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின்கீழ் (அட்மா) நீடித்த நிலையான மானாவாரி இயக்கம் குறித்த விவசாயிகள் பயிற்சி பிரதமரின் இயற்கைவழி பண்ணையம் குறித்த தேசிய இணையதள கருத்தரங்குடன் கீழப்பழூரில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடத்தப்பட்டது. வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் லதா தலைமை வகித்தார்.

வேளாண்மை அலுவலர் சேகர் முன்னிலை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குநர் லதா சிறுதானியங்கள் மற்றும் பயறுவகை பயிர்கள், சாகுபடித்தொழில் நுட்பங்கள், உயிர் உரங்கள், திரவ உயிர் உரங்கள் பயன்படுத்தி மண்ணின் வளத்தை மேம்படுத்துதல், விதை நேர்த்தி, களை மேலாண்மை, நீர் மேலாண்மை மற்றும் பயிர் பாதுகாப்பு முறைகள் மற்றும் அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து விளக்கினார். வேளாண்மை அலுவலர் சேகர் முன்னிலை வகித்து எண்ணெய் வித்துப் பயிர்கள் சாகுபடித் தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கி பேசினார். மானாவாரி நிலங்களில் சாகுபடி மேற்கொள்ளும்போது மண் ஆய்வு செய்து பரிந்துரைக்கப்பட்ட அளவு உரங்களை இடுவதால் உரச் செலவு குறைவதுடன் மகசூலும் பாதிக்கப்படாது என விவசாயிகளுக்கு விளக்கினார்.

இணையதள கருத்தரங்கில் பிரதமர் இயற்கை வழிப் பண்ணையம் குறித்த உரை விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது. விவசாயிகள் பாரம்பரிய மற்றும் இயற்கை வழி முறைகளை பின்பற்றி விவசாயம் செய்யவேண்டும். பசுந்தாள் உரம், பஞ்சகாவ்யா, ஜீவாமிர்தம், அமிர்த கரைசல், மண்புழு உரம் போன்ற இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும். இதனால் குறைந்த செலவில் அதிக இலாபம் பெறலாம். மேலும், பயிர்க் கழிவுகளை வயலில் எரிப்பதைத் தவிர்த்தால் உலக வெப்ப மயமாதலை தடுக்கலாம் என்பதை கருத்தில் கொண்டு இந்தியா ஒரு முன்னோடி நாடாக விளங்க வேண்டும். இந்தியாவில் உள்ள 80 சதவீத சிறு மற்றும் குறு விவசாயிகள் மேற்கண்ட இயற்கை வழி முறைகளை பின்பற்றி குறைந்த செலவில் அதிக லாபம் அடையலாம் என விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது. பயிற்சியில் துணை வேளாண்மை அலுவலர் மகேந்திரன், உதவி வேளாண்மை அலுவலர்கள் முத்து, ஜெய்சங்கர், ராதா, முருகன், வட்டார தொழில் நுட்ப மேலாளர் மீனாட்சி, உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் சுந்தரமூர்த்தி, வாசுகி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : National Internet Seminar ,
× RELATED பெரம்பலூரில் செயல்படும் லால்குடி...