×

நெல்லை சாப்டர் பள்ளியில் சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலி தகுதி, சுகாதார சான்றிதழ்கள் வழங்கப்பட்டது எப்படி? விதிமுறை மீறல்கள் குறித்து விசாரணை

நெல்லை, டிச.20: நெல்லை டவுன் சாப்டர் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலியான சம்பவத்தில், அப்பள்ளி கட்டிடங்களுக்கு 3 மாதங்களுக்கு முன்புதான் சுகாதார சான்றிதழ் வழங்கப்பட்டது தெரிய வந்துள்ளது. தீயணைப்புத்துறை சார்பில் கடந்த ஜனவரி மாதம் சான்று வழங்கப்பட்டுள்ளது. நெல்லை டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 17ம்தேதி கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர். தமிழகத்தை உலுக்கிய இச்சம்பவத்தின் தொடர்ச்சியாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் குழுக்கள் அமைக்கப்பட்டு பள்ளி கட்டிடங்களின் தரம் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் கட்டிட உறுதிதன்மையை ஆராய 18 குழுக்கள் அமைக்கப்பட்டு, பள்ளிகள் தோறும் சென்று ஆய்வு நடத்தி வருகின்றன.

இந்நிலையில் டவுன் சாப்டர் பள்ளிக்கு தகுதி சான்றிதழ்கள் வழங்கியதில் பல்வேறு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. கட்டிடம் உள்ள பகுதியில் மாணவர்களின் பாதுகாப்பு, தேவையான தீயணைப்பு கருவிகள் எண்ணிக்கை குறித்து ஆண்டுக்கு ஒருமுறை தீயணைப்புத்துறை சான்று வழங்குவது வழக்கம். கடந்த ஜனவரியில் டவுன் சாப்டர் பள்ளியை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கியுள்ளனர். அதில் தீயணைப்பு கருவிகள் அனைத்தும் உள்ளதாக சான்றளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுவர் இடிந்து மாணவர்கள் காயமடைந்தபோது, முதலுதவி பெட்டி இல்லாமல் மாணவர்களும், ஆசிரியர்களும் திண்டாடியுள்ளனர். வேறு வழியின்றி காயமடைந்தவர்களுக்கு டிஞ்சர் மட்டுமே வைக்கப்பட்டதாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.

நெல்லை மாநகராட்சி வழங்கிய சுகாதார சான்றும் கேள்விக்குறியாகவே உள்ளது. 3 மாதங்களுக்கு முன்பு கடந்த 5-8-2021 அன்று நெல்லை மாநகராட்சி, டவுன் சாப்டர் பள்ளிக்கு அனைத்துவித சுகாதார வசதிகளும் இருப்பதாக சான்றளித்துள்ளது. மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் பள்ளியை ஆய்வு செய்து, போதுமான கழிப்பறைகள், வகுப்பறைகளில் போதிய காற்றோட்ட வசதிகள், போதிய வெளிச்சம் உள்ளிட்டவை இருப்பதாக சான்றளித்துள்ளனர். மேலும் கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்த சான்றிதழை வருவாய்துறையினர் 2019ம் ஆண்டு வழங்கியுள்ளனர். பள்ளி கட்டிடத்தின் தன்மை அடிப்படையில் ஏ,பி,சி என 3 விதமான சான்றுகள் வழங்கப்படும். சர்வேயர், பொறியாளர் ஆகியோர் ஆய்வு செய்து அளித்த அறிக்கை அடிப்படையில் கடந்த 14-8-2019ல் நெல்லை தாசில்தார் கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து சான்று வழங்கியுள்ளார். அதில் வரும் 13-8-2022ம் தேதி வரை 3 ஆண்டுகளுக்கு கட்டிட உறுதித்தன்மைக்கு சான்று வழங்கப்பட்டுள்ளது.

சாப்டர் பள்ளியில் உள்ள கட்டிடங்களின் அடிப்படையில் 650 மாணவர்கள் மட்டுமே தங்கி படிக்க முடியும் என அதிகாரிகள் கட்டிடத்திற்கு சான்றிதழ் வழங்கியுள்ளனர். ஆனால் 2720 மாணவர்கள் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசின் விதிமுறைகளை பல்வேறு வகையில் பள்ளி நிர்வாகம் மீறியதாலேயே இத்தகைய கோர விபத்து நடந்ததாக மாணவர்களும், பெற்றோர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கு தகுதி, சுகாதார சான்றுகளை வழங்கிய அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் அறிக்கை சமர்ப்பிப்பு
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது ‘‘நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட டவுன் சாப்டர் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து ஆய்வு செய்வதற்காக, நெல்லை ஆர்டிஓ தலைமையில் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் பள்ளியை ஆய்வு செய்து விரைவில் அறிக்கை சமர்பிப்பர்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Nellai Chapter School ,
× RELATED காட்பாடியில் மாயமான வடமாநில சிறுமி...