×

தர்மபுரி மாவட்டம் செழித்து வளர ஒகேனக்கல் உபரிநீர் திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்

தர்மபுரி, டிச.16: தர்மபுரி மாவட்டம் செழித்து வளர, ஒகேனக்கல் உபரிநீர் திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், மொரப்பூர், கடத்தூர் ஆகிய இடங்களில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை வகித்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் வாங்கினார். அப்போது அமைச்சர் பேசியதாவது: ஒகேனக்கல் கூட்டு குடிநீர், அனைத்து கிராமங்களுக்கும் கிடைக்க, ₹28 கோடி மதிப்பீட்டில் அனைத்து ஊராட்சிகளிலும், தனித்தனியாக டேங்க் அமைக்கப்பட உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் விவசாயத்தை பாதுகாக்க, மழைக்காலத்தில் வீணாக செல்லும் உபரி நீரை ஏரிக்கு கொண்டு வந்து நிரப்பும் வகையில், ஒகேனக்கல் உபரிநீர் திட்டம் நிறைவேற்ற அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், தர்மபுரி மாவட்டத்தில் விவசாயம் செழித்து, பசுமை நிறைந்த மாவட்டமாக காட்சி அளிக்கும். ஒகேனக்கல் உபரிநீர் திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என உறுதி அளிக்கிறேன்.

இந்த ஆட்சி மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. வட்டார அளவில் 10 இடங்களில் மனு வாங்கும் முகாம் நடக்கிறது. மக்கள் தரும் மனுக்கள் மீது அதிகாரிகள் மனசாட்சியுடன் செயல்பட்டு, உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மக்களுக்கும், அரசுக்கும் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, நம்முடைய கோரிக்கைகள் கண்டிப்பாக நிறைவேறும், தேவைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்பட்டுள்ளது. அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் நாங்கள் செயல்படுவோம். தமிழக முதல்வர் மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றுபவர். இந்த முகாமில் கொடுக்கப்பட்ட மனுக்களில், தகுதி உடைய கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும். தர்மபுரி மாவட்டத்தில் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் சிறப்பாக செயல்படுகின்றனர். மாவட்ட வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை அவர்கள் வைத்துள்ளனர். இந்த முகாமின் மூலம், மிகப்பெரிய திட்டங்கள் தயாரித்து வருகிறோம். இந்த திட்டங்கள் முதல்வரின் கையால் நிறைவேற்றப்படும். தர்மபுரி மாவட்டத்திற்கு, முதல்வர் விரைவில் வருவார். அவரது கைகளால் உங்களுக்கு நலத்திட்டங்களை வழங்குவார். இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், கலெக்டர் திவ்யதர்சினி, கூடுதல் கலெக்டர் வைத்திநாதன், மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். ரயில் முன் பாய்ந்து மாணவன் தற்கொலை: அரூர் அஞ்சுகம் நகர் பகுதியை சேர்ந்த சுப்பு மகன் காளியப்பன் (19). இவர், தர்மபுரி செட்டிகரையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில், 3ம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து வந்தார். நேற்று முன்தினம், கல்லூரியில் மாணவர்கள் இடையே பிரச்னை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால், வீட்டிற்கு வராமல் இருந்த காளியப்பன் இரவு சிந்தல்பாடி-மொரப்பூர் ரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, தர்மபுரி நோக்கி சென்ற ரயில் முன் காளியப்பன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, தகவலறிந்து வந்த ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்ணை தாக்கி கிணற்றில் தள்ளியவர் கைது: கடத்தூர் அடுத்த கேத்திரெட்டிபட்டியை சேர்ந்தவர் சர்க்கரை. இவரது மனைவி செல்வி(40). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவருக்கும் வழித்தட பிரச்னை உள்ளது. நேற்று முன்தினம் தோட்டத்திற்கு சென்று புல்கட்டுகளை எடுத்து கொண்டு செல்வி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த சின்னசாமி மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த கல்பனா, பசுபதி மற்றும் பவினா ஆகிய 4பேரும் செல்வியை தாக்கியதில், நிலை தடுமாறி அருகே இருந்த மொட்டை கிணற்றில் செல்வி விழுந்து படுகாயமடைந்தார். இதுகுறித்து புகாரின் பேரில், சின்னசாமியை போலீசார் கைது செய்தனர்.

மணல் கடத்திய லாரி பறிமுதல்: இண்டூர் அடுத்த நத்தஅள்ளி பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில், மண் வெட்டி எடுப்பதாக கலெக்டர் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தர்மபுரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் விஜயலட்சுமி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது மண் அள்ளிக் கொண்டிருந்தவர்கள், தப்பியோடி விட்டனர். இதனையடுத்து, அங்கு மண் அள்ள பயன்படுத்திய 2 பொக்லைன், டிப்பர் லாரி மற்றும் 4 யூனிட் மணலை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்து இண்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

இளம்பெண் மாயம்: காரிமங்கலம் கெண்டிகானஅள்ளியை சேர்ந்தவர் விஜயகுமார் மனைவி பிரியா (28). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். பிரியா காவேரிப்பட்டணத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம், பாலக்கோட்டில் உள்ள மாமியார் வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டு சென்ற பிரியா பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, விஜயகுமார் அளித்த புகாரின் பேரில், காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஷப்பூச்சி கடித்து பெண் பலி: காரிமங்கலம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சஞ்சீவன், இவரது மனைவி விஜயா(51). இவர் கடந்த சில தினங்களுக்கு முன் தனது வீட்டு அருகே விறகு கட்டைகளை அடுக்கி கொண்டிருந்த போது, விஷம் பூச்சி கடித்துள்ளது. இதையடுத்து அவர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : Okanagan ,Dharmapuri ,
× RELATED வரலாறு காணாத வெயில்!: நீர்வரத்தின்றி...