சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2.40 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்ய திட்டம்

தர்மபுரி, டிச.16: சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2.40 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2021-2022ம் ஆண்டு அரவை தொடக்க விழா நேற்று நடந்தது. தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இதனை தொடங்கி வைத்தார். கலெக்டர் திவ்யதர்சினி தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டு 7215 ஏக்கரில் கரும்பு பதிவு செய்யப்பட்டு, 2.40 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 2020-2021 அரவைப்பருவத்தில் 10.12 சதம் சர்க்கரை கட்டுமானம் எய்தியதின் அடிப்படையில், நடப்பாண்டில் அரவை செய்யப்படும் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ₹2,929 வழங்கப்படும். மேலும், கடந்த 2020-2021ம் ஆண்டு அரவை பருவத்தில் ஆலைக்கு கரும்பு சப்ளை செய்த அங்கத்தினர்களுக்கு, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கரும்பு உற்பத்தி ஊக்கத் தொகை மற்றும் சிறப்பு உற்பத்தி ஊக்கத் தொகை, டன் ஒன்றுக்கு ₹192.50 வீதம் சம்பந்தப்பட்ட 1538 அங்கத்தினர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக ₹200.18 லட்சம் அனுப்பப்பட உள்ளது. கரும்பு தோட்டங்களிலிருந்து ஆலை அரவைக்கு கரும்பு கொண்டு வந்து சேர்க்கும் பணியில் 95 லாரிகளும், 74 டிராக்டர்களும், 35 டிப்பரும், 17 மாட்டு வண்டிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

எனவே, அனைத்து விவசாய பெருமக்களும், ஆலைக்கு சுத்தமான கரும்பை வெட்டி அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. நல்ல மழை பெய்துள்ள காரணத்தால், எதிர்வரும் 2022-2023 அரவைப் பருவத்திற்கு ஆலை முழு அளவு அரவை திறனை அடைய, 14 ஆயிரம் ஏக்கரில் கரும்பு பதிவு செய்து, 4.30 லட்சம் மெட்ரிக் டன் அரவை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. கரும்பு வெட்டு ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்கவும், வெட்டுக் கூலியை குறைக்கவும், ஆலையில் 2 கரும்பு அறுவடை இயந்திரங்களும், இயந்திரம் மூலம் அறுவடை செய்த கரும்பை ஆலையில் இறக்க கரும்பு இறக்கும் இயந்திரமும் பயன்பாட்டில் உள்ளதால், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கரும்பு வெட்டு இயந்திரங்களை பயன்படுத்த ஏதுவாக கரும்பு விவசாயிகள் நான்கரை அடி இடைவெளியில் அகலப்பார் முறையில், தமிழ்நாடு அரசின் மான்யத்துடன் நிலத்தடி சொட்டு நீர் பாசனம் அமைத்து, கரும்பு சாகுபடி செய்து பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் வைத்திநாதன், முன்னாள் எம்எல்ஏக்கள் தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன், முன்னாள் அமைச்சர் பழனியப்பன், முன்னாள் எம்பிக்கள் எம்.ஜி.சேகர், தாமரைச்செல்வன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் யசோதா மதிவாணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் ரஹமதுல்லாகான், தலைமை கரும்பு அரவை அலுவலர் தாமோதரன், கூடுதல் சர்க்கரை ஆலைத்தலைவர் விஸ்வநாதன் உள்பட சர்க்கரை ஆலை நிர்வாக அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: