×

கடைகளில் ‘2022 டைரி’ விற்பனைக்கு குவிப்பு

ஈரோடு,டிச.13: புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு ஈரோட்டில் கடைகளில் ‘2022 டைரிகள்’ விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு பிறக்கும் போது, டிசம்பர் மாத துவக்கத்தில் இருந்தே ‘காலண்டர், டைரி’ விற்பனை களை கட்டும். நடப்பாண்டு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் டெல்லி, கல்கத்தா போன்ற பகுதிகளில் டைரி உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், ஈரோட்டில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டு 2022 டைரி அதிகளவில் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு கச்சேரி வீதியில் ‘டைரி’ மொத்த விற்பனையாளர் கூறியதாவது:  
ஸ்மார்ட் போன் வருகைக்கு பிறகு ‘டைரி’ விற்பனை முற்றிலுமாக குறைந்து விட்டது. இதேபோல், காலண்டர் விற்பனையும் சரிந்து விட்டது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக டைரி மற்றும் காலண்டர் விற்பனை பாதியாக குறைந்தது. நடப்பாண்டு கொரோனா தொற்று குறைந்ததால் டெல்லி, கொல்கத்தா போன்ற மாநிலங்களில் ஆங்கில மொழியில் அச்சிடப்படும் டைரிகளும், சிவகாசி மாவட்டத்தில் தமிழ் மொழியில் அச்சிடப்படும் டைரிகளும் அதிகளவில் வரத்தாகி உள்ளது.

வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு காலண்டர், டைரி வழங்கும் தொழிற்சாலை, வர்த்தக நிறுவனங்களும்  நடப்பாண்டு அதிகளவில் ஆர்டர் கொடுத்து உள்ளனர். அதற்கான உற்பத்தி பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. நவம்பர் மாத இறுதியில் இருந்தே 2022ம் ஆண்டுக்கான டைரிகளை விற்பனைக்கு வைத்துள்ளோம். ஒரு டைரி ரூ.70 முதல் ரூ.450 வரை விற்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED 2 டன் ரேஷன் அரிசியை மாவோயிஸ்ட் தனிப்பிரிவு போலீசார் பறிமுதல்