×

கேரளாவுக்கு ரயிலில் கடத்த முயன்ற 13 கிலோ கஞ்சா பறிமுதல் ஒடிசாவை சேர்ந்தவர் கைது; காட்பாடியில் அதிகாலை சோதனை

வேலூர், டிச.13: காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கேரள மாநிலத்துக்கு கடத்த முயன்ற 13 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒடிசாவை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா செல்லும் தன்பாத்-ஆழப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை 3 மணியளவில் காட்பாடி ரயில் நிலையம் முதலாவது பிளாட்பாரத்தில் வந்து நின்றது. அப்போது அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த காட்பாடி ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையில் ஏட்டுகள் சத்தியமூர்த்தி, சந்திரசேகரன், தேவேந்திரன் கொண்ட குழுவினர், ரயிலின் டி3 பெட்டியில் ஒருவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்து அப்பெட்டியில் சோதனை நடத்தினர். அதில் சந்தேகத்துக்குரிய நபர் வைத்திருந்த சூட்கேசை திறந்து பார்த்தபோது அதில் 13 பார்சல்களில் கட்டப்பட்ட மொத்தம் 13 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கஞ்சா பார்சல்களுடன் அதை வைத்திருந்த ஒடிசா மாநிலம் பாலாங்கிர் மாவட்டம் குர்ஜாமுண்டா கிராமத்தை சேர்ந்த பாபுலால் சாஹூ(43) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கஞ்சாவை ஒடிசா மாநிலத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காட்பாடி ரயில்வே போலீசார் கஞ்சாவை கடத்த முயன்ற பாபுலால் சாஹூவை கைது செய்து, அவரை கஞ்சா பார்சல்களுடன் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசில் தொடர் விசாரணைக்காக ஒப்படைத்தனர்.

Tags : Odisha ,Kerala ,Katpadi ,
× RELATED ஒடிசாவில் கடும் வெப்ப அலை; பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை