×

தேவாலயங்களில் வர்ணம் பூச்சு - மின் விளக்கு அலங்காரம் குமரியில் கிறிஸ்துமஸ் ெகாண்டாட்டம் களை கட்டியது வீதிகள் தோறும் கேரல் நிகழ்ச்சிகள்

நாகர்கோவில், டிச.11: இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை கட்டி உள்ளன. இயேசு கிறிஸ்துவின் பிறப்பு  உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.  ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 25ம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெறும். குமரி மாவட்டத்திலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா உச்ச கட்டத்தில் இருந்ததால், எளிமையான முறையில் கொண்டாட்டங்கள் நடந்தன. இந்த ஆண்டு மிகவும் உற்சாகத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை ெகாண்டாட ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.  கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்களின் வீடுகளிலும், ஆலயங்களிலும் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டு, அவை மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.  இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுப்படுத்தும் வகையில் இந்த குடிலில் காட்சிகள் அமைத்துள்ளனர்.

அதே போல கிறிஸ்துமஸ் மரம் அமைத்து அதை மின் விளக்குகளால் அலங்கரித்துள்ளனர். நாகர்கோவில், மார்த்தாண்டம், தக்கலை, அருமனை, குளச்சல், களியக்காவிளை, கன்னியாகுமரி உள்பட மாவட்டம் முழுவதும் தற்போது வீதிகளில் கேரல் நிகழ்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன. கிறிஸ்து பிறப்பு பாடல்களை பாடியவாறு குழந்தைகள், பெண்கள் ஊர்வலமாக வருகிறார்கள். கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தும் வலம் வருகிறார்கள். வர்த்தக நிறுவனங்களில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் கிறிஸ்துமஸ் தாத்தா ெபாம்மைகள், ஸ்டார்கள் அமைத்துள்ளனர்.
குமரி மாவட்ட கடலோர பகுதிகளிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களை கட்டி உள்ளது. பல்வேறு விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. தேவாலயங்களில் வர்ணம் பூசுதல்,  மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.  

குடில்கள் அமைக்க முக்கியத்தேவையான சுக்குநாரி புல்லை சிறு, சிறு கட்டு கட்டாக கட்டி விற்பனையும் தொடங்கி உள்ளது. நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பார்வதிபுரம், தோட்டியோடு, வில்லுக்குறி பகுதிகளில் சுக்குநாறி புல், விற்பனை செய்பவர்கள் வரிசையாக அமர்ந்துள்ளனர். வாகனங்களில் வருபவர்கள் ஆர்வத்துடன் இதை வாங்கி செல்கிறார்கள்.

Tags : Christmas ,Kumari Carol ,
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...