×

சி.அம்மாபட்டி-உல்லியக்கோட்டை ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழைநீர் 7 கிராம மக்களின் போக்குவரத்து பாதிப்பு

குஜிலியம்பாறை, டிச. 6: குஜிலியம்பாறை அருகே சி.அம்மாபட்டி-உல்லியக்கோட்டை வழித்தடத்தில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் அதிகளவில் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதியில் உள்ள 7 கிராம மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பாளையம்-திண்டுக்கல் இடையே ரயில் செல்லும் வழித்தடங்களில் 7 ஆளில்லா ரயில்வே கிராசிங் அகற்றப்பட்டு சுரங்கப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் சுரங்கப்பாதைகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கும். இந்நிலையில் குஜிலியம்பாறையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் சுரங்கப்பாதையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இந்த தேங்கி கிடக்கும் மழைநீரை மின்மோட்டார் மூலம் அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் கடந்த இரண்டு நாட்களாக இவ்வழித்தடத்தில் உள்ள முத்தாம்பாறை, மேட்டூர், தாதனூர், கணக்குபிள்ளையூர், மணியாரம்பட்டி, முத்தம்பட்டி, உல்லியக்கோட்டை ஆகிய 7 கிராம மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வழித்தடம் வழியே சென்று வரும் கிராம மக்கள், சுரங்கப்பாதையை ஒட்டியவாறு உள்ள ரயில்வே தண்டவாளத்தின் நடுவே டூவீலர்கள் செல்வதற்கு வசதியாக பெரிய கற்களை போட்டு, சற்றும் ஆபத்தை உணராமல் டூவீலர்களில் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர்.இவ்வாறு செல்லும் போதும் அசம்பாவித சம்பவம் நடக்க வாய்ப்புள்ளது. எனவே, சி.அம்மாபட்டி-உல்லியக்கோட்டை ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை மின்மோட்டார் மூலம் அகற்றவும், தண்டவாளத்தின் நடுவே போடப்பட்ட பெரிய கற்களை அகற்றவும் ரயில்வே துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : C. Ammapatti-Ulliyakottai ,
× RELATED ரத்த அழுத்த பரிசோதனை முகாம்