×

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சார்பில் மின்னணு வாரிசு நியமனத்தை ஊக்குவிக்கும் முயற்சி

கோவை, டிச.5:  இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் கீழ் இ.பி.எப்.ஒ. வில் பதிவு செய்துள்ள அனைத்து தனியார் நிறுவன உறுப்பினர்களுக்காக, மின்னணு வாரிசு நியமனத்தை ஊக்குவிக்கும் முயற்சியை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு எடுத்துள்ளது. இந்த வசதியின் மூலம் உறுப்பினர்கள் தாங்களாகவே இணைய வழியில் வாரிசு நியமனம் செய்யலாம். இதனை எந்த நேரத்திலும் புதுப்பிக்கலாம்.

மின்னணு வாரிசு பதிவேற்றம் செய்யும் போது உறுப்பினரின் யு.ஏ.என் எண், ஆதாரில் பதிவிட்ட அலைபேசி எண், ஸ்கேன் செய்யப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 100 கே.பிக்கு மிகையாமல் இருக்கவேண்டும். இவையனைத்தும் உள்நுழைவதற்கு முன் உடனடியாக இருத்தல் அவசியம்.  இந்த மின்னணு வாரிசு நியமன செயல்பாட்டினால் உறுப்பினர்கள் தங்களது பி.எப். பணத்தை திரும்பப்பெறும் படிவங்கள், குறிப்பாக ஓய்வூதிய படிவங்களை இணையவழி மூலமாக ஓய்வு பெறும் நேரத்தில் கூடுதல் ஆவணங்கள் இல்லாமல் தாக்கல் செய்ய போன்றவற்றிக்கு உதவுகிறது. இவ்வாறு நியமிக்கப்பட்ட வாரிசுதாரர்கள், உறுப்பினர்கள் திடீரென துரதிருஷ்டவசமாக மரணம் அடைந்தால் இணையவழி மூலமாக படிவங்களை தாக்கல் செய்வதன் மூலம் சிரமமின்றி இ.பி.எப் சேமிப்பை திரும்ப பெறலாம்.

எனவே அனைத்து இ.பி.எப். உறுப்பினர்களும் உடனடியாக ஒருங்கிணைந்த உறுப்பினர் இடைமுக போர்டல் மூலம் தங்களது மின்னணு வாரிசை பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் அனைத்து உறுப்பினர்களும் ஆதார் மற்றும் வங்கிக்கணக்கு போன்ற அடிப்படை கே.ஒய்.சி விவரங்களை தங்கள் யு.ஏ.என் உடன் இணைத்து இ.பி.எப்.யின் அனைத்து இணையவழி சேவைகளை பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த தகவலை கோவை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உதவி கமிஷனர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

Tags : Labor Futures Deposit Fund System ,
× RELATED பைக் ஏற்றி கணவரை கொலை செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்