×

ஏரல்-மங்கலகுறிச்சி சாலையில் பாசன மடை பாலத்தில் திடீர் ஓட்டை

ஏரல், டிச.3:ஏரலில் இருந்து மங்கலகுறிச்சி செல்லும் சாலையில் பாசன மடை பாலத்தில் திடீரென ஓட்டை விழுந்ததால் அவ்வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்காலிகமாக சீரமைக்கப்பட்டதால் 5 மணி நேரத்திற்கு பின் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. ஏரலில் இருந்து மங்கலகுறிச்சி செல்லும் மெயின் ரோட்டில் கீழமங்கலகுறிச்சி பாலம் அருகில் வைகுண்டம் வடகாலில் இருந்து ரோட்டிற்கு தென்புறம் உள்ள விளைநிலத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக பாசமடை உள்ளது. இந்த பாலத்தின் மேல் பகுதியில் நேற்று மதியம் திடீரென பெரிய ஓட்டை விழுந்தது. இதையடுத்து பாதுகாப்பை கருதி ஏரல் இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதா, ஏரலில் இருந்து மங்கலகுறிச்சி வழியாக வைகுண்டம், நெல்லைக்கு செல்லும் பஸ் மற்றும் ஏரலில் இருந்து பண்டாரவிளை, சாயர்புரம் வழியாக தூத்துக்குடிக்கு செல்லும் அனைத்து பஸ்களையும் நிறுத்தி மாற்று வழியாக ஏரலில் இருந்து கோட்டைகாடு வழியாகவும், சிறுத்தொண்டநல்லூர் வழியாகவும் மாற்றிவிட்டார். சாலையில் விழுந்த ஓட்டையை பெருங்குளம் ஆர்ஐ விஜயஆனந்த், விஏஓ சுந்தரி ஆகியோர் பார்வையிட்டனர். நெடுஞ்சாலை துறை சாலை ஆய்வாளர் பாலலெட்சுமி, சாலை பணியாளர்கள் சிவகணேஷ், பாக்கியராஜ், முத்துகிருஷ்ணன் ஆகியோர் பாசன மடை பாலத்தில் விழுந்த ஓட்டையை ஜேசிபி மூலம் தோண்டி அந்த இடத்தில் சரள் மண்ணை போட்டு தற்காலிகமாக சீரமைத்தனர். இதையடுத்து 5 மணி நேரம் கழித்து அவ்வழியாக மாலை 6 மணிக்கு போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது.

Tags : Earl-Mangalakurichi road ,
× RELATED ஜேஇஇ நுழைவு தேர்வில் மதிப்பெண்...