×

ஆரல்வாய்மொழியில் பழமையான அம்மன் கோயிலில் வெள்ளி கிரீடம் கொள்ளை

ஆரல்வாய்மொழி, ஏப்.16: ஆரல்வாய்மொழி கோட்டக்கரை இசக்கியம்மன் கோயிலில் பழமைவாய்ந்த வெள்ளி கிரீடம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி  வடக்கூர்  கோட்டக்கரை அருகே இசக்கியம்மன் கோயில் உள்ளது. இது பழமையான  கோயில் ஆகும். மன்னர் ஆட்சி காலத்தில் இங்கு  வீரர்களுக்கு மருந்து காய்ச்சியதாக வரலாறு கூறுகிறது. பிரசித்தி பெற்ற இந்த  கோயிலுக்கு பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.  இங்கு தினமும் காலை 10 மணிக்கு பூஜைகள் நடக்கும். வெள்ளி, செவ்வாய்கிழமைகளில் காலை மற்றும் மாலையில் பூஜை நடக்கும்.

நேற்றுமுன்தினம் சித்திரை  விஷூ சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் அம்மனுக்கு  வெள்ளி கிரீடம் மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு பூஜை நடந்தது. இந்த  நிலையில் நேற்று காலை கோயில் பொறுப்பாளர் முருகன் நடை திறக்க வந்தார்.  அப்போது  கோயில் வெளிக்கதவு பூட்டப்பட்டிருந்தது. உள்ளே உள்ள கதவும் மற்றும் கருவறை  கதவும் திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கோயில் பூஜாரி  ராமன், தம்பிரான்குட்டி ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து  ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர்  சீதாலட்சுமி, சப்இன்ஸ்பெக்டர் வின்ஸ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடம்  வந்து விசாரணை நடத்தினர். இதில், நள்ளிரவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த  மர்ம நபர்கள் அம்மனுக்கு அணிவிக்கப்படும் வெள்ளி கிரீடத்தை திருடி  சென்றது தெரியவந்தது. பழங்கால வெள்ளியால் செய்யப்பட்ட இந்த கிரீடம் விலை  மதிப்பற்றது என்று கூறப்படுகிறது. ஆனால் அம்மனுக்கு  அணிவிக்கப்படும் தங்க தாலி, கண்மலர், நெற்றிபொட்டு உள்ளிட்ட நகைகள்  திருடப்படாமல் அப்படியே இருந்தது. சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள்  வந்து அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். அதுபோல் மோப்ப நாய்  வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது. மிகவும் சக்தி வாய்ந்த கோயிலாக  கருத்தப்பட்டு வந்த இந்த அம்மன் கோயிலில் கொள்ளை நடந்திருப்பது  பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Aralbaymozhi ,
× RELATED ஆரல்வாய்மொழி போரூராட்சி அருகே...