×

நல்லம்பள்ளி அருகே வாழைத்தார் விலை குறைவு

நல்லம்பள்ளி, ஏப்.9: நல்லம்பள்ளி அருகே வாழைத்தார் விலை குறைவால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் தொப்பூர் பிக்கப்டேம் பகுதியில், 2 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்களில் மொந்தை வாழை சாகுபடி செய்துள்ளனர். கடந்த ஆண்டு பருவமழை நன்கு பெய்ததால், வாழை மகசூல் அதிகரித்துள்ளது. இதனால் வியாபாரிகள் வாழைத்தார்களை குறைந்த விலைக்கு கேட்பதால், வாழை சாகுபடி செய்த விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:தொப்பூர் பகுதியில் அதிகளவிலான விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் வாழைத்தார்களை மொத்தமாக வாங்கும் வியாபாரிகள் ஒரு வாழைத்தாரை ₹50 முதல் ₹100க்கு விலை கேட்கின்றனர். குறைந்த விலைக்கு வியாபாரிகள் கேட்பதால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, வாழைத்தார்களை அறுக்காமல் மரத்திலேயே விட்டிருந்தோம். தோட்டத்தில் வாழை மரம் வைத்ததில் இருந்து வாழை தார் வைக்கும் வரை, ₹1.50லட்சம் வரை செலவாகியுள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் அடித்த சூறைக்காற்றினால், 30க்கும் மேற்பட்ட மரங்கள் தாரோடு சாய்ந்துவிட்டது. உரிய விலையும் கிடைக்காமல், மரங்களும் சாய்ந்துள்ளதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Tags : Nallampalli ,
× RELATED தர்மபுரி மாவட்டத்தில் கொண்டைக்கடலை அறுவடை பணி தீவிரம்