×

கிருஷ்ணகிரி புனித லூயிஸ் மருத்துவமனைக்கு ₹4 லட்சம் மதிப்பில் வெண்டிலேட்டர் கருவி

கிருஷ்ணகிரி, ஏப்.9:  கிருஷ்ணகிரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள புனித லூயிஸ் மருத்துவமனை, கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ சேவை அளித்து வருகிறது. கொரோனா தொற்று காலத்திலும், கொரோனா நோயாளிகளுக்கு பிரத்யேக பிரிவுகள் அமைத்து, சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் முதன்மையானதாக கருதப்படும் வெண்டிலேட்டர் கருவி கூடுதலாக இருந்தால், மிகவும் உபயோகமாக இருக்கும் என மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக்கொண்டது. இதையடுத்து ₹4 லட்சம் மதிப்பிலான வெண்டிலேட்டர் கருவியை ஐவிடிபி நிறுவனரும், ராமன் மகசேசே விருதாளருமான குழந்தைபிரான்சிஸ் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், ‘நகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை, ஏழை, எளிய மக்களுக்கு வழங்கி வரும் மருத்துவ சேவையை ஊக்குவிக்க இந்த உதவியை அளித்துள்ளோம். இதுவரை இந்த மருத்துவமனைக்கு 100 கட்டில்கள், அறுவை சிகிச்சை கருவிகள், சோலார் ஹீட்டர், குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரம், குழந்தைகளின் துடிப்பை கண்டறியும் கருவி, கடைநிலை பணியாளர்களுக்கு உதவிகள் என ₹21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஐவிடிபி நிறுவனம் வழங்கியுள்ளது,’ என்றார். அப்போது, மருத்துவமனையின் தலைமை நிர்வாகி சௌமியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : St. Louis Hospital ,Krishnagiri ,
× RELATED வறட்சியால் பாதிக்கப்பட்ட மாமரங்கள் கணக்கெடுப்பு