×

கோவை ஜிசிடி எண்ணிக்கை மையத்தில் ஓட்டு மெசின்கள் வைக்கப்பட்ட அறைகளுக்கு சீல் வைப்பு

கோவை, ஏப்.8: கோவை மாவட்டத்தில் ஓட்டுப்பதிவு முடிந்து கருவிகள் அனைத்தும், எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டது. வேட்பாளர்கள், ஏஜென்டுகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில் நுட்ப கல்லூரியில் (ஜிசிடி) ஓட்டு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஓட்டுப்பதிவு முடிந்ததும், மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 4,427 ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட 6,885 ஓட்டு மெசின்கள், 5,316 கட்டுப்பாட்டு கருவிகள், 5,894 வி.வி.பேட் கருவிகள் அனைத்தும் ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு அனுப்பி வைக்கும் பணி மேற்ெகாள்ளப்பட்டது. 10 முதல் 15 ஓட்டுச்சாவடிகளை ஒருங்கிணைத்து, மண்டலமாக பிரித்து அந்த ஓட்டுச்சாவடிகளில் உள்ள ஓட்டுப்பதிவு மெசின்களை வாகனங்களில் ஏற்றி எண்ணிக்கை மையத்திற்கு அனுப்பினர். இரவு 11 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை ஓட்டு மெசின் வாகனங்கள் வந்து சேர்ந்தது.

கடைசியாக வால்பாறை தொகுதியில் இருந்து ஓட்டு மெசின்களுடன் வாகனங்கள் வந்தன. இந்த மெசின்கள் அனைத்தும், அதற்கென ஒதுக்கப்பட்ட பாதுகாப்பு கூடத்தில் வரிசை எண் முறைப்படி வைக்கப்பட்டன. சட்டமன்ற தொகுதி வாரியாக 10 பாதுகாப்பு கூடம் (ஸ்ட்ராங்க் ரூம்) அமைக்கப்பட்டுள்ளது. இதில் உரிய விதிகளின்படி ஓட்டு மெசின்கள் வரிசையில் வைக்கப்பட்டு, அறைகளின் கதவு மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. வேட்பாளர்கள், ஏஜென்டுகளின் முன்னிலையில் ஸ்ட்ராங்க் ரூம் கதவுகளில் சீல் வைத்து பூட்டப்பட்டது. வளாகம், எண்ணிக்கை மையம், கல்லூரியின் வெளிப்பகுதி, ஏஜன்ட்கள் காத்திருப்பு கூடம் என 5 இடங்களில் 310 போலீசார், 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த வளாகத்திற்குள் வௌி நபர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக கோவை மாவட்ட கலெக்டர் நாகராஜன் கூறுகையில், ‘‘ஓட்டு எண்ணிக்கை மையத்தில் 137 கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது. ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர் இங்கே தங்கி கண்காணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஓட்டு மெசின்கள் உள்ள அறைகளின் முன்பு கண்காணிப்பு கேமரா இருக்கும். இதில் பதிவாகும் காட்சிகளை டிவி அறையில் இருந்து முகவர்கள் பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.

தினமும் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் எண்ணிக்கை மைய வளாகம் சென்று தங்களது தொகுதியின் ஓட்டு மெசின்கள் வைக்கப்பட்ட அறைகள் எந்த நிலையில் இருக்கிறது என பார்த்து விட்டு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வளாகத்தில் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா வசதி செய்யப்பட்டுள்ளது. வரும் மே 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை கேமரா கண்காணிப்பு இருக்கும்’’ என்றார்.

Tags : Coimbatore ,GCD Counting Center ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்