×

பெரியமாரியம்மன் கோயில்களில் கம்பம் நடும் விழா

ஈரோடு, ஏப். 8:  ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் மற்றும் வகையறா கோயில்களில் நேற்று இரவு கம்பம் நடப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று குண்டம் மற்றும் தேரோட்டம் நடக்க உள்ளது.   ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் மற்றும் அதன் வகையறா கோயில்களான சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில்களில் நடப்பாண்டு கொரோனா பரவல் காரணமாக எளிமையான முறையில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்தது. இதன்பேரில், நடப்பாண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் இரவு பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இதைத்தொடர்ந்து நேற்று மூன்று கோயில்களிலும் கம்பம் நடப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

இதில், ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில் குண்டம் விழா இன்று (8ம் தேதி) அதிகாலை 6 மணியளவில் நடக்க உள்ளது. இதைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு சின்னமாரியம்மன் கோயிலில் தேர் வடம் பிடித்து இழுத்தலும் தேரோட்டமும், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.     இதற்காக சின்னமாரியம்மன் கோயில் தேர் தேரோட்டத்திற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நாளை (9ம் தேதி) இரவு 8 மணிக்கு மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 12ம் தேதி மாலை 3 மணியளவில் கம்பம் எடுக்கும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராட்டும் நடக்க உள்ளது. 13ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவு பெற உள்ளது. இன்று நடக்கும் குண்டம் விழாவில் கோயில் பூசாரிகள் மட்டுமே பங்கேற்று தீ மிதிக்க உள்ளனர். பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. தேரோட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Periyamariamman ,
× RELATED ஓமலூர் பெரியமாரியம்மன் கோயில் பூச்சாட்டு விழா