×

ஈரோட்டின் வளர்ச்சிக்காகவே எனது பொதுவாழ்வு இருக்கும்

ஈரோடு, ஏப். 4:  ஈரோட்டில் வளர்ச்சியை மையப்படுத்தியே எனது பொதுவாழ்வு இருக்கும் என்று திமுக வேட்பாளர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.   ஈரோடு  மேற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சு.முத்துசாமி  கூறியதாவது: ஈரோட்டில் கட்சி பாகுபாடின்றி அத்தனை பேரையும் தனிப்பட்ட  முறையில் எனக்கு தெரியும். ஈரோட்டினை சென்னை, கோவை போன்ற நகரங்களுக்கு  இணையாக கட்டமைக்க வேண்டும் என்பதற்காக நான் அமைச்சராக இருந்த காலத்தில்  பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். 1979ம் ஆண்டு எனது  வற்புறுத்தலின்பேரில்தான் கோவை மாவட்டத்தில் இருந்து பெரியார் மாவட்டம்  உருவாக்கப்பட்டது. மாவட்டம் உருவாக்கியதோடு, அதற்கான அடிப்படை கட்டமைப்பு  வசதிகளையும் மேம்படுத்தும் வகையில், கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டது. அதோடு  கலெக்டர் அலுவலகம் எதிரிலேயே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டினேன்.  அடுக்குமாடி குடியிருப்புகள் என்பது சமீபகாலமாகத்தான் அரசு சார்பில்  கட்டிக்கொடுக்கப்படுகிறது.
   ஆனால் நான் 1977ம் ஆண்டிலேயே 1000 வீடுகள்  கொண்ட அடுக்குமாடியை கட்டிக்கொடுத்தேன்.

ஈரோட்டின் எதிர்கால வளர்ச்சியை  கருத்தில் கொண்டு ஈரோடு பஸ் ஸ்டாண்டினை விரிவுபடுத்தினேன். தமிழகத்தில்  வெளிமாவட்ட, டவுன், மினி பஸ்கள் அனைத்துக்கும் ஒரே இடத்தில் பஸ் ஸ்டாண்டு  இருப்பது ஈரோட்டில் மட்டுமே. சித்தோட்டில் ஐஆர்டிடி பொறியியல் கல்லூரி,  பெருந்துறையில் மருத்துவ கல்லூரி ஆகியவை கொண்டு வந்தேன். ஈரோடு மற்றும்  பவானியில் காவிரி ஆற்றினை கடக்க மேம்பாலங்கள் கட்டப்பட்டது. இதுபோல நான்  ஈரோட்டிற்காக செல்படுத்திய ஏராளமான திட்டங்களை என்னால், பட்டியலிட முடியும்.  திட்டங்கள் என்பது இன்றைக்கு மட்டுமே பலன் தரக்கூடியதாக இருக்கக்கூடாது.  தொலைநோக்கு பார்வையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் மட்டுமே  மக்களுக்கும், அரசுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

ஏனெனில் நான் செயல்படுத்திய  திட்டங்கள் ஈரோட்டில் இன்றைக்கும் பயன்பாட்டில் உள்ளது. தற்போது ஈரோட்டின்  வளர்ச்சி என்பது மிகவும் பின்தங்கி உள்ளது. இதை மீட்டெடுக்க வேண்டிய  கட்டாயம் நம் அனைவருக்கும் உள்ளது. ஈரோட்டின் வளர்ச்சி, மக்களின் நலன்  ஆகியவற்றை மையப்படுத்தியே எனது பொதுவாழ்வு இதுவரை இருந்துள்ளது. மக்கள்  எனக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் ஈரோடு மட்டுமல்ல ஈரோடு  மாவட்டத்தையே மற்ற மாவட்ட மக்கள் பிரமிக்க வைக்கும் அளவுக்கு முன்னேற்றி  காட்டுவேன். இவ்வாறு முத்துசாமி கூறினார்.\

Tags : Erode ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...