கே.கே. நகரில் ரயில்வே மேம்பாலம் திமுக வேட்பாளர் முத்துசாமி உறுதி

ஈரோடு,ஏப்.2: ஈரோடு கே.கே.நகரில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக வேட்பாளர் முத்துசாமி உறுதியளித்துள்ளார். ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சு. முத்துசாமி ரங்கம்பாளையம், அண்ணாநகர், கே.கே.நகர், சேனாபதிபாளையம், ரகுபதிநாயக்கன்பாளையம், ரயில் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று நேற்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: ஈரோடு மாநகராட்சி பகுதியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மிகவும் குறைவாக உள்ளது. இதை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட குடிநீர், நிலுவையில் உள்ள பாதாள சாக்கடை பணிகளை முடிப்பது, சாலை செப்பனிடுதல், சாக்கடை வசதி இல்லாத பகுதிகளில் வடிகால் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும். ஈரோட்டில் இருந்து சென்னிமலை, வெள்ளோடு செல்லும் பிரதான சாலையாக உள்ளது. ஆனால் கே.கே.நகரில் உள்ள ரயில்வே நுழைவு பாலத்தில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகனங்கள் எதுவும் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். இப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். எனவே இப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகள், புகார்கள் மீது தாமதமின்றி உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். மாநகர் மற்றும் புறநகர் பகுதி மக்களுக்காக காலை, மாலை நேரங்களில் அரசு பஸ்கள் கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். திமுக தேர்தல் அறிக்கையில் மக்களின் எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கும் வகையில், பல்வேறு வாக்குறுதிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கைகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்படும்.  எனவே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முத்துசாமி பேசினார்.

Related Stories: