×

மொடக்குறிச்சியில் பாலிடெக்னிக் கல்லூரி அமைக்கப்படும்

ஈரோடு, ஏப். 1:   மொடக்குறிச்சி தொகுதியில் பாலிடெக்னிக் கல்லூரி அமைக்கப்படும் என்று திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.திமுக  கூட்டணியில் மொடக்குறிச்சி தொகுதி வேட்பாளராக போட்டியிடும்  சுப்புலட்சுமி ஜெகதீசன் நேற்று கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று பல்வேறு  பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள்  மத்தியில் வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பேசியதாவது: மொடக்குறிச்சி  தொகுதியில் இளைஞர்கள், மாணவர்களுக்கு என்று எதிர்கால திட்டங்கள்  செயல்படுத்தப்படும். இத்தொகுதியில் பாலிடெக்னிக் கல்லூரி கொண்டுவர வேண்டும்  என்பது நீண்டகால கோரிக்கை. அதிலும் பெண்களுக்கு என்று தனியாக வேண்டும்  என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். நிச்சயம் இக்கோரிக்கை  நிறைவேற்றப்படும். இளைஞர்கள், பெண்களுக்கு என்று வேலைவாய்ப்புகள்  உருவாக்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக திறன் மேம்பாட்டு பயிற்சி  மையங்கள் தொகுதியில் உருவாக்கப்படும். வேளாண் தொழிலை அடிப்படையாக கொண்ட  தொகுதியாக உள்ளதால், வேளாண் தொழிலுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

   மேலும் விவசாய  விளை பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி சந்தைப்படுத்த  குழுக்கள் அமைக்கப்படும். மொடக்குறிச்சி தொகுதியில் ஊத்துக்குளி  பகுதியில் திமுக ஆட்சி காலத்தில் சிப்காட் சிறு தொழில்பேட்டை செயல்பட்டு  வருகிறது. இது போன்ற தொழில்பேட்டைகள் தொகுதியில் தேவை உள்ள இடங்களில்  உருவாக்கி கொடுக்கப்படும். மேலும் தொகுதியில் குடிநீர், சாலை, மின்சாரம்,  கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். எனவே,  வருகின்ற தேர்தலில் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி  பெறச்செய்யுங்கள். இவ்வாறு சுப்புலட்சுமி ஜெகதீசன் பேசினார்.

Tags : Polytechnic College ,Modakkurichi ,
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்கள்...