×

பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 170 நுண் பார்வையாளர்கள் நியமனம்

தர்மபுரி, மார்ச் 31: தர்மபுரி மாவட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க, 170 பேர் நுண் பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா, சிசிடிவி கேமரா மூலமாகவும் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்தார். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் மொத்தம் 1,817 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், 139 இடங்களில் அமைந்துள்ள 420 வாக்குச்சாவடிகள் அதிக பதற்றமான வாக்குச்சாவடி என கண்டறியப்பட்டுள்ளது. அதிக பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்துதல், துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இந்நிலையில், அதிக பதற்றமான வாக்குச்சாவடிகளில், நுண் பார்வையாளர்கள் (மைக்ரோ அப்சர்வர்) கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதையொட்டி, வங்கி உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களில் பணிபுரியும் 170பேர் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட நியமிக்கப்பட்டுள்ள, நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான கார்த்திகா தலைமை வகித்தார். தேர்தல் பொது பார்வையாளர்கள் தினேஷ் சிங் (தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி), கமால் ஜஹான் லக்ரா (பாலக்கோடு,பென்னாகரம்), பங்கஜ் (அரூர்), சக்கிராலா சாம்பசிவராவ் (காவல் பார்வையாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த பயிற்சி வகுப்பில், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான கார்த்திகா பேசியதாவது: வரும் 6ம் தேதி நடக்கும் தேர்தலில் வாக்குப்பதிவு நேர்மையாகவும், முறைகேடுகள் இல்லாமலும் நடக்கவும், எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் வாக்காளர்கள் வாக்களிக்கவும், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதிக பதற்றமான வாக்குச்சாவடிகளில், விதிமீறல்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என்பதை, நுண் பார்வையாளர்கள் கண்காணிக்க வேண்டும். மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகளின் வாக்குப்பதிவு நிலவரங்களை, ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை நுண் பார்வையாளர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும்.

வாக்குச்சாவடி மையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு தேவைப்பட்டால், அது குறித்தும் நுண் பார்வையாளர்கள் தகவல் அளிக்க வேண்டும். காலை 5.30 மணி முதல் வாக்குப்பதிவு முடிவுற்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்து செல்லும் வரை கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். வாக்குப்பதிவு மையங்களில் வாக்காளர் தவிர அனுமதி அட்டை இல்லாத வேறு நபர்கள் யாரும் வருவதை அனுமதிக்க கூடாது. நேர்மையான நம்பகமான தேர்தல் நடைபெற, நுண் பார்வையாளர்கள் பணியாற்றிட வேண்டும். வாக்குப்பதிவு குறித்து விரிவான அறிக்கையை பொது தேர்தல் பார்வையாளர்களுக்கு வழங்கிட வேண்டும்.

வாக்குச்சாவடியில் சிசிடிவி கேமரா மூலமாகவும், வாக்குப்பதிவு கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார். இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, தர்மபுரி சப் கலெக்டர் பிரதாப், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தணிகாச்சலம் (பென்னாகரம்), முத்தையன் (அரூர்), சாந்தி (பாலக்கோடு), நசீர் இக்பால் (பாப்பிரெட்டிப்பட்டி), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தேர்தல் நரேந்திரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வட்டாட்சியர் ரமேஷ், நுண் பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா