×

வாங்கல் அருகே கடனை திரும்ப செலுத்த கோரி மகளிர் குழுவினருக்கு வங்கி நோட்டீஸ் அனுப்பியது: காவல் நிலையம் முன் பெண்கள் திரண்டதால் பரபரப்பு

கரூர், மார்ச். 31: கரூர் மாவட்டம் வாங்கல் அருகே வங்கியில் பெற்ற கடன் திரும்ப செலுத்தாத நிலையில் வங்கி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் நூற்றுக்கணக்கான மகளிர்கள் வாங்கல் காவல் நிலையம் முன்பு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் இருந்து தலா 5 பேர் குழுவாக கொண்ட 40 மகளிர் குழுவினர் ஏஜெண்ட் மூலம் வங்கியில் பணம் பெற்றுள்ளனர். இந்நிலையில், வங்கியில் வாங்கிய கடனை, அனைத்து குழுவினர்களும் ஏஜெண்ட்கள் மூலம் தவணை செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வாங்கிய கடன் இதுநாள் வரை திருப்பிச் செலுத்தப்படவில்லை என வங்கியில் இருந்து மகளிர் குழுவினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்ட மகளிர் குழுவினர் நேற்று மதியம் வாங்கல் காவல் நிலையம் முன்பு கூடி, தாங்கள் அனைவரும் வங்கியில் வாங்கிய கடனை முறையாக ஏஜெண்ட்கள் மூலம் செலுத்திய நிலையில், தற்போது வங்கியில் இருந்து நோட்டீஸ் வந்துள்ளது. எனவே, இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையின் அடிப்படையில், வாங்கல் போலீசார், வங்கியின் மண்டல அதிகாரி மற்றும் ஏஜெண்ட்டுகள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பிரச்னை காரணமாக 100க்கும் மேற்பட்ட பெண்கள் காவல் நிலையம் முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Vangal ,
× RELATED கரூர் ஒன்றிய திமுக சார்பில் பொங்கல் விளையாட்டு போட்டிகள்