×

ஈரோடு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தினர் 510பேர் வருகை

ஈரோடு, மார்ச் 30:  தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய பிரதேசத்தில் இருந்து 6 கம்பெனியை சேர்ந்த துணை ராணுவத்தினர் 510பேர் ஈரோட்டிற்கு நேற்று முன்தினம் வந்தடைந்தனர்.  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்.,6ம் தேதி நடக்க உள்ளது. இதையொட்டி தேர்தல் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதில், ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக கடந்த மாதம் சட்டீஸ்கர் மாநிலத்தில் இருந்து சி.ஐ.எஸ்.எப். பிரிவை சேர்ந்த துணை ராணுவத்தினர் 92பேர் வந்தடைந்தனர். இதைத்தொடர்ந்து பி.எஸ்.எப். பிரிவை சேர்ந்த 95பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு வந்தனர். அவர்கள், டவுன் சப்-டிவிசன் பகுதியில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 526 வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டு, மொத்தம் 2,741 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில், 304 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள கூடுதல் போலீசார், துணை ராணுவத்தினர் வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மூலமாக தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது.

   இதனை ஏற்ற தேர்தல் ஆணையம் கூடுதல் போலீசார், துணை ராணுவத்தினர் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்திருந்தது. இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து 6 கம்பெனிகளை சேர்ந்த துணை ராணுவத்தினர் 510பேர் ரயில் மூலம் ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு நேற்று முன்தினம் இரவு வந்தடைந்தனர். அவர்களை தேர்தல் பிரிவு அதிகாரிகள் வரவேற்று, மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். இவர்கள் நாளை (இன்று) முதல் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக ஈரோடு எஸ்பி., தங்கதுரை தெரிவித்துள்ளார்.





Tags : Auxiliary Army ,Erode ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...