பெரம்பலூரில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்

பெரம்பலூர்,மார்ச் 29: பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறுஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்படும் தவக்காலம், கடந்த பிப்ரவரி மாதம் 17ம் தேதி தொடங்கியது. 40 நாட்கள் அனுசரிக்கப்படும் தவக்காலத்தில், இயேசுவின் சிலுவை மரணம், உயிர்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய கடைசி வாரம் புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்தப் புனித வாரத்தின் முதல்நாள் குருத்தோலை ஞாயிறு எனப்படுகிறது.

குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு நேற்று பெரம்பலூர் நகரில் ரோமன் கத்தோலிக்கக் கிறிஸ்தவர், தமிழ் சுவிஷேச லுத்தரன் திருச்சபை, தென்னிந்திய திருச்சபை ஆகிய 3 கிறிஸ்தவ சபைகளை சேர்ந்த கிறிஸ்வர்கள் ஒன்றாக, ஸ்டேட் பாங்க் அருகேயிருந்து தென்னை மரத்து குருத் தோலைகளுடன் நகரில் ஊர்வலமாக வந்தனர். சங்குப்பேட்டை, தேரடி, பெரிய கடைவீதி, கனரா வங்கி, பழைய பஸ்டாண்டு, காமராஜர் வளைவு வழியாக சென்று, அவரவர் தேவாலயங்களுக்கு பிரிந்து சென்றனர். இந்த ஊர்வலத்தில் அனைவரும் தென்னங் குருத்து ஓலைகளை கைகளில் எடுத்துக் கொண்டு ஓசன்னா ஓசன்னா எனப்பாடல் பாடிச்சென்றனர்.

புனித பனியமய மாதா தேவாலயத்தில் பெரம்பலூர் மறைவட்ட முதன்மை குரு ராஜமாணிக்கம் தலைமையில் குருத்து ஞாயிறு சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இதேபோல் பாளையம், அன்னமங்கலம், தொண்டமாந்துறை, நூத்தப்பூர், திருவாளந்துறை, திருமாந்துறை, வடக்கலூர், பெருமத்தூர், பாடாலூர், எறையூர் ஆகிய ஊர்களில் கத்தோலிக்க தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். வருகிற ஏப்ரல் 1ம்தேதி புனித வியாழன், 2ம்தேதி இயேசுவின் இறப்பை நினைவுபடுத்தும் புனிதவெள்ளி அனுசரிக்கப்பட்டு, 4ம்தேதி உயிர்ப்பை கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகைக் கொண்டாடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More