×

ஏப்ரல் 6ல் வாக்குப்பதிவு தென்மாவட்டங்களில் களை கட்டும் ஓட்டுவேட்டை

நெல்லை, மார்ச் 29: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 6ம் தேதி நடக்கிறது. வரும் 4ம் தேதி மாலையுடன் பிரசாரம் நிறைவடையும் நிலையில் தொகுதிகளில் அனைத்து வேட்பாளர்களும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தென்மாவட்டங்களில் காலை முதல் நடந்துவரும் ஓட்டுவேட்டை களைகட்டுகிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் மாநிலம் முழுவதும் ஒரேகட்டமாக வரும் ஏப். 6ம் தேதி நடக்கிறது. வரும் 4ம் தேதி மாலையுடன் பிரசாரம் நிறைவடைகிறது. தேர்தலுக்கு 8 நாட்களே உள்ளதால் வேட்பாளர்கள் அவரவர் தொகுதியில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் நெல்லை. தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல தொகுதிகளில் 5 முனைப் போட்டி நிலவுகிறது. ஏராளமான சுயேட்சைகளும் களத்தில் உள்ளனர். திமுக, அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களும் பிற கட்சிகளின் வேட்பாளர்களும் கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் காலை 6 மணிக்கே பிரசாரத்தை துவங்கிவிடுகின்றனர். வீதிவீதியாக திறந்த வாகனத்தில் சென்று வாக்காளர்களை சந்தித்து தாங்கள் சார்ந்த கட்சியின் தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சங்களையும் தேர்வு செய்யப்பட்டால் தொகுதிக்கு தாங்கள் செய்யஉள்ள திட்டங்கள் குறித்தும் விளக்கிப் பேசுகின்றனர். வாகனங்கள் செல்ல முடியாத சிறிய தெருக்களில் நடந்து சென்று வாக்கு சேகரிக்கின்றனர்.

 பல இடங்களில் அந்தந்தப்பகுதி கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும் வேட்பாளர்களுக்கு பொன்னாடை, மலர்மாலை அணிவித்தும் வரவேற்பு அளிக்கின்றனர். நண்பகல் வரை வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்கள் மதிய உணவு மேற்கொண்டு சற்று களைப்பாறிய பின்னர் மீண்டும் மாலை 4 மணி முதல் தீவிர பிரசாரம் மேற்கொள்கின்றனர். குறைந்த நாட்கள் அவகாசமே உள்ளதால் தொகுதி முழுவதும் செல்லும் வகையில் பிரசாரத்தை இரவு 10 மணி வரை தொடர்கின்றனர். பிரதான கட்சி வேட்பாளர்களுக்கு இணையாக சில சுயேட்சைகளும் பிரசாரம் செய்கின்றனர். பல தொகுதிகளில் சுயேட்சைகளின் பிரசாரங்களை காணமுடியவில்லை. சில பகுதிகளில் தேர்தல் பார்வையாளர்கள். மற்றும் தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு அலுவலர்களும் வேட்பாளர்களை கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு தென்மாவட்டங்களில் காலை முதல் நடந்துவரும் ஓட்டு வேட்டைகளை கட்டுகிறது.

Tags : Southern Districts ,
× RELATED “தென் மாவட்டங்களுக்கு செல்லும்...