×

தஞ்சை ராஜராஜன் நினைவு மணிமண்டப வளாகம் பராமரிக்கப்படுமா?

தஞ்சை, மார்ச் 26: தஞ்சையில் கடந்த 1995ம் ஆண்டு 8வது உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டபோது தஞ்சை நகரம் விரிவாக்கம் செய்யப்பட்டு பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தஞ்சையில் புதிய பஸ் நிலையம் தொடங்கப்பட்டதும் அப்போதுதான். 8வது உலகத் தமிழ் மாநாட்டின் நினைவாகவும், தஞ்சையை தலைநகராகக் கொண்டு சோழப் பேரரசை ஆண்டுவந்த மாமன்னர் ராஜராஜனின் பெருமையை தஞ்சைக்கும், தமிழகத்திற்கும் உலகிற்கும் எடுத்துரைக்கும் வகையில் தஞ்சை ராமநாதன் ரவுண்டானா பகுதி அருகே நம்பர் 1 வல்லம் சாலை மற்றும் புதிய பஸ் நிலையம் செல்லும் சாலைகளுக்கு நடுவே ராஜராஜன் மணிமண்டபம் அமைக்கத் திட்டமிடப்பட்டது.
தமிழ்நாடு அரசு கட்டுமானக் கழகத்தால் இதற்கான திட்ட வரைவு மற்றும் வரைபடம் தயாரிக்கப்பட்டு மொத்தம் 3.23 ஏக்கர் பரப்பளவில் ராஜராஜன் மணிமண்டபம் கட்டுவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு கடந்த 27.7.1994ல் இதன் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு 25.12.1994ல் ராஜராஜன் மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டது. மணி மண்டபத்தில் கீழ் தளத்தில் 17 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ராஜராஜன் அகழ் வைப்பகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், சோழப் பேரரசின் வரலாறு மற்றும் மாமன்னர் ராஜராஜனின் சிறப்பை விளக்கும் வகையில் கல்வெட்டுகள், செப்பேடுகள், சோழ அரசர்கள் பயன்படுத்தி பொருள்கள், அரசர்களின் தலைமைமுறை வரலாறு, அவர்கள் ஆட்சி செய்த ஆண்டுகள் விவரம், அவர்கள் செய்த ஆட்சி மாற்றங்கள், தொண்டுகள், சேவைகள், குடவோலை முறை போன்று சோழ அரசர்கள் அறிமுகம் செய்த திட்டங்கள், போர்கள், வெற்றிகள் குறித்த பல்வேறு தகவல்கள் இங்கு காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
முதல் தளத்தில் 17 ஆயிரம் சதுர அடியில் பொதுமக்கள் அமர்ந்து ஓய்வெடுக்கும் வகையில் மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் நடுவே 5 அடுக்கு மாடிகளுடன் 72 அடி உயர கோபுரமும் அமைக்கப்பட்டுள்ளது இதன் தனிச்சிறப்பு. ரூ.1.60 கோடியில் கட்டிமுடிக்கப்பட்ட மாமன்னர் ராஜராஜன் மணிமண்டபத்தினை அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 1.1.1995ல் திறந்துவைத்தார். திறப்பு விழாவில் கலந்துகொண்ட அப்போதைய மலேசிய எரிசக்தி, தொலைத்தொடர்பு மற்றும் தபால்துறை அமைச்சர் தத்தோ எஸ்.சாமிவேலு ராஜராஜன் மணிமண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாமன்னர் ராஜராஜன் குதிரையில் அமர்ந்திருப்பது போன்ற சிலையை திறந்துவைத்தார்.
வழிபாட்டு ஸ்தலமாக மட்டுமின்றி சிறந்த சுற்றுலா ஸ்தலங்களில் ஒன்றாகவும் திகழும் சிறப்பு மிக்க தஞ்சைக்கு நாள்தோறும் ஏராளமான வெளிநாட்டு, வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் தஞ்சைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளது. தஞ்சை பெரியகோயில், அரமண்மனையைப் பார்வையிடும் சுற்றுலா பயணிகள் ராஜராஜன் மணிமண்டபத்தை பார்ப்பதையும் தவிர்ப்பதில்லை.
ஆனால், சிறப்பு மிக்க மாமன்னர் ராஜராஜன் மண்டபத்தில் அமைக்கப்பட்ட செயற்கை நீரூற்றுகள் செயலற்று கிடக்கிறது. பல இடங்களில் செடிகள், புற்கள் காய்ந்த நிலையில் காட்சியளிக்கின்றன. செடி, கொடிகளும், புதர்களும் மண்டிக்கிடக்கின்றன. இவற்றை சுத்தம் செய்து ஒழுங்கப்படுத்த வேண்டும். சுற்றுலா வந்தவர்கள் விட்டுச்சென்ற உணவுக் கழிவுகள், பிளாஸ்டிக் பைகள், வாட்டர் பாக்கெட்டுகள், குளிர்பான பிளாஸ்டிக் பாட்டில்கள், காகிதங்கள் என குப்பையாகவே காட்சியளிக்கின்றன. மேலும், ஏராளமானோர் வந்து செல்லும் ராஜராஜன் மண்டமண்டபத்தில் குடிநீருக்காக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
எனவே, சிறப்பு மிக்க தஞ்சைக்கு மேலும் அழகும் பெருமையும் சேர்க்கும் வகையில் கட்டப்பட்ட மாமன்னர் ரஜாரஜான் மணிமண்டபம் பசுமையாகவும், குப்பைகளின்றி தூய்மையாகவும், பழுதடைந்த செயற்கை நீரூற்றுகளில் தண்ணீர் வரும் வகையில் புதிதாக மாற்றியமைக்கப்பட்டு மணிமண்டப வளாகம் தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி தஞ்சை வாழ் மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு.

Tags : Tanjore Rajarajan Memorial Hall ,
× RELATED தஞ்சை ராஜராஜன் நினைவு மணிமண்டப வளாகம்...