×

கொரோனா தொற்று பரவல் எதிரொலி ஊட்டி அரசு கல்லூரியில் மீண்டும் இணையவழி வகுப்புகள் துவக்கம்

ஊட்டி, மார்ச் 25: கொரோனா 2ம் அலை தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஊட்டி அரசு கலை கல்லூரியில் மீண்டும் இணையவழியில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இறுதியாண்டு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் மட்டும் கல்லூரியில் நடத்தப்பட்டு வருகிறது. கொேரானா தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் முதல் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டன. தொடர்ந்து, நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இணைய வழியில் நடத்தப்பட்டு ஆன்லைனில் பாடம் நடத்தப்பட்டன. கடந்த அக்டோபர் நவம்பர் மாதங்களில் தொற்று பாதிப்பு குறைய துவங்கியது.  டிசம்பர் மாதம் அளித்த தளர்வில் கல்லூரிகளில் அனைத்து வகுப்புகளையும் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தது. 8 மாதங்களுக்கு பிறகு கடந்த டிசம்பர் மாதம் 7ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் திறக்கப்பட்டன.  ஊட்டியில் உள்ள அரசு கலை கல்லூரியும் திறக்கப்பட்டது. கல்லூரியில் உள்ள 15 பாடப்பிரிவுகளிலும் இளங்கலை, முதுகலை இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் கல்லூரிக்கு வந்தனர். தனிமனித இடைவெளி, முகக்கவசம் கட்டாயம், வெப்பநிைல பரிசோதனை உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளையும் கடைபிடித்து வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில், தமிழகத்தில் இம்மாத துவக்கத்தில் இருந்து கொரோனா 2ம் அலை தொற்று பாதிப்பு அதிகரிக்க துவங்கி உள்ளது. இதனால், தடுப்பு நடவடிக்கைகளை அரசு மீண்டும் துவக்கி உள்ளது. இதன்தொடர்ச்சியாக, பள்ளிகளில் 9,10,11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மறு உத்தரவு வரும் வரை விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு இணையவழியில் வகுப்புகள் நடத்தவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.  இதனை பின்பற்றி ஊட்டி அரசு கலை கல்லூரியில் முதலாமாண்டு, இரண்டாமாண்டு இளங்கலை மற்றும் முதலாமாண்டு முதுகலை மாணவ, மாணவியர் கல்லூரிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு அவர்களுக்கு நேற்று முதல் இணையவழியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இளங்கலை மற்றும் முதுகலையில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் செய்முறை தேர்வுகள் கல்லூரியில் நடத்தப்பட்டு வருகிறது. அவர்களுக்கு சமூக இடைவெளி விட்டு அமர வைக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தேர்வுகள் வரும் 31ம் தேதிக்குள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் முறையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.இது குறிதது கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி கூறுகையில்,`ஊட்டி அரசு கல்லூரியில் மீண்டும் ஆன்லைன் வழி வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன. இறுதியாண்டு பயில கூடிய மாணவர்களுக்கு மட்டும் செய்முறை தேர்வுகள் கல்லூரியில் நடத்தப்பட்டு வருகிறது. வரும் 31ம் தேதிக்குள் அத்தேர்வுகளும் முடிக்கப்படும்’ என்றார்.

Tags : Ooty Government College ,
× RELATED ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் துறைகள்...