×

ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் துறைகள் மாற்ற, விடுதி ஒதுக்கீடுக்கு பணம் பெற்ற முதல்வர், பேராசிரியர் சஸ்பெண்ட்

*சர்ச்சை வீடியோவால் தொடரும் அதிரடி

ஊட்டி : ஊட்டியில் அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கு துறைகளை மாற்றவும், விடுதி ஒதுக்கீடு செய்யவும் பணம் பெற்றதாக எழுந்த சர்ச்சையில் கல்லூரி முதல்வர், பேராசிரியர் ஆகியோர் அதிரடியாக சஸ்ெபண்ட் செய்யப்பட்டனர். நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியில் அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. வேறு தனியார் கல்லூரிகள் ஏதும் இல்லாத நிலையில், ஊட்டி, குன்னூர், மஞ்சூர் மற்றும் கோத்தகிரி போன்ற பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் இங்கு பயிலுகின்றனர். பெரும்பாலும், கூலித்தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் குழந்தைகளே அதிகளவு படிக்கின்றனர். இந்த கல்லூரியில் 4,500 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

பெரும்பாலான மாணவர்கள் சமவெளி பகுதிகளில் இருந்து வந்தும் இங்கு பயிலுகின்றனர். இந்த கல்லூரியில் உள்ள மாணவர்கள் சிலர் துவக்கத்தில் சேர்ந்த துறைகளில் இருந்து வேறு துறைகளுக்கு மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ளனர். துறை மாற்றம் கோரி விண்ணப்பித்த மாணவர்களிடம் பேராசிரியர் ரவி என்பவர் ரூ.2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை பணம் பெற்றுக்கொண்டு, துறைகளை மாற்றி கொடுத்துள்ளார். மேலும், இந்த தொகையை மாணவர்களிடத்தில் ‘கூகுள் பே’ மூலம் அந்த பேராசிரியர் பெற்று கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் வெளியில் வரவே, இவரிடம் கோவை மண்டல கல்லூரி கல்வி இயக்கக இணை இயக்குநர் கலைச்செல்வி தலைமையில் அதிகாரிகள் கடந்த வாரம் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் கடந்த ஒரு வாரமாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலானது. அதில், ஊட்டி அரசு கலைக்கல்லூரி முதல்வர் அருள் ஆண்டனி, ஆதி திராவிடர் மாணவர்களுக்கு விடுதிகளில் இடம் ஒதுக்கீடு செய்வதற்காக பணம் பெறும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இதைத்தொடர்ந்து இது குறித்து உயர் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், ஊட்டி அரசு கலைக்கல்லூரி முதல்வர் அருள் ஆண்டனி, பேராசிரியர் ரவி ஆகியோர் மாணவர்களிடத்தில் பணம் பெற்றுக்கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, இவர்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்து உயர்கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சர்ச்சை வீடியோவால் தொடரும் அதிரடி நடவடிக்கை கல்லூரி பேராசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இட ஒதுக்கீடு செய்ய பணம் பெற்ற விவகாரத்தில் முதல்வர், பேராசிரியர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இவர்கள் மட்டுமின்றி, இந்த கல்லூரியில் பல்வேறு துறைகளை சேர்ந்த சில பேராசிரியர்கள் இதுபோன்று மாணவர்களுக்கு துறைகள் மாற்றுவதற்கும், பல்வேறு காரணங்களுக்காக பணம் பெறுவதாகவும் கூறப்படுகிறது. எனவே, ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் முறையாக விசாரணை மேற்கொண்டால் மேலும் பலர் சிக்க வாய்ப்புள்ளது என பேசப்படுகிறது.

The post ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் துறைகள் மாற்ற, விடுதி ஒதுக்கீடுக்கு பணம் பெற்ற முதல்வர், பேராசிரியர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Ooty Government College of Arts ,Ooty: Govt Arts College ,Ooty ,Ooty Govt Arts College ,Dinakaran ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...