வந்தவாசி, மார்ச் 24: வந்தவாசியில் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ₹1.48 லட்சம் ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். வந்தவாசி தேர்தல் பறக்கும் படை தாசில்தார் ஹரிகுமார் தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் பறக்கும் படையினர், நேற்று ஆரணி நெடுஞ்சாலை மும்முனி புறவழிச்சாலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, செய்யாறில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற, லோடு ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர். அதில், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஷாஜகான் என்பவர் ₹91 ஆயிரம் ரொக்கம் உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்றது தெரியவந்தது. அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
அதேபோல், நிலை கண்காணிப்பு குழு அலுவலர் சுகுமார் தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் யாசர் அராபத் மற்றும் குழுவினர் திண்டிவனம் நெடுஞ்சாலை எஸ்.காட்டேரி கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, புதுவையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற காரை மடக்கி சோதனை செய்தனர். காரில் வந்த புதுவையை சேர்ந்த விஜயகுமார் மனைவி சினேகா என்பவர் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ₹57 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், அந்த பணத்தை தாலுகா அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளர்கள் ரஞ்சித், ஜானகிராமன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.