×

காரைக்காலில் புகழ்பெற்ற மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா கந்தூரி விழா துவக்கம்

காரைக்கால், மார்ச் 24: காரைக்காலில் புகழ்பெற்ற மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்ஹா அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இங்கு கந்தூரி விழா வெகு விமரிசையாக நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக கந்தூரி விழா நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி 198வது ஆண்டு கந்தூரி விழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆண்டு தோறும் கொடியேற்றத்தின் போது 50க்கும் மேற்பட்ட அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் ரதங்கள் காரைக்காலின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வரும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறையின் படி 4 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

மாலை 4 மணிக்கு தொடங்கிய கொடி ஊர்வலம் இரவு 8 மணிக்கு தர்கா வந்தடைந்தது. பின்னர் ரதங்களில் இருந்து கொடியிறக்கப்பட்டு தர்ஹாவின் மினோராக்கள் மற்றும் கொடிமரத்திற்கு கொண்டு சென்று வைக்கப்பட்டது. துவா ஓதப்பட்டு கொடிமரத்திலும், மினோராக்களிலும் கொடியேற்றப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் மாவட்ட தேர்தல் அதிகாரி அர்ஜூன் சர்மா உத்தரவுப்படி இரவு 10 மணிக்குள்ளாக கொடியேற்ற நிகழ்ச்சிகள் முடிவடைந்தன. இரவு நடத்தப்படும் இன்னிசை நிகழ்ச்சியும் நடத்தப்படவில்லை. முக்கிய நிகழ்ச்சி நாளான ஏப்ரல் 1ஆம் தேதி சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற உள்ளது.

வழக்கமாக இரவில் நடைபெறும் சந்தனக்கூடு ஊர்வலம் இந்த ஆண்டு தேர்தல் காரணமாக மாலையில் தொடங்கி இரவு 9 மணிக்குள் முடிவடைய இருக்கிறது. முன்னதாக ஹலபு எனும் போர்வை வீதிவலமும் பகலிலேயே நடைபெறவுள்ளது. காரைக்காலில் கொரோனா அதிகரித்துவரும் நிலையில், கந்தூரி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் மக்கள் முககவசம் அணியவும், இடைவெளியை பின்பற்றவும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிந்து கலந்து கொள்ளவும் வக்ஃபு நிர்வாக சபையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags : Mastan Sahib Waliullah Dargah Kandoori Festival ,Karaikal ,
× RELATED காரைக்கால் பகுதியில் குறுவை சாகுபடி...