குன்னம் சட்டமன்ற தொகுதியில் 22 வேட்பாளர்கள் போட்டி

பெரம்பலூர்,மார்ச் 23: குன்னம் சட்டமன்றத் தொகுதியில் திமுக, அதிமுக உள்ளிட்ட 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பொதுத்தொகுதியான குன்னம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட கடந்த 12ம்தேதி முதல் 19ம் தேதி வரை திமுக, அதிமுக உள்ளிட்ட 32 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். கடந்த 20ம்தேதி குன்னம் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட வழங்கல் அலுவலர் சங்கர் தலைமையில் குன்னத்தில் நடந்த மனுக்கள் பரிசீலனையில் திமுக, அதிமுக உள்ளிட்ட 23 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 9 பேர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து நேற்று (22ம்தேதி) மனுக்கள் வாபஸ்பெற இறுதி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், மதியம் 3 மணிவரையில் ஒருவர் மட்டுமே மனுவை வாபஸ் பெற்றார். இதனை தொடர்ந்து இறுதி செய்யப்பட்ட 22 வேட்பாளர்களுக்குகுன்னம் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட வழங்கல் அலுவலர் சங்கர் தலைமையில் சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.

இதன்படி திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் (உதயசூரியன்), அதிமுக வேட்பாளர் ஆர்.டி.இராமச்சந்திரன் (இரட்டைஇலை), பகுஜன் சமாஜ் கட்சிசார்பாக பாண்டியன் (யானை), நாம்தமிழர் வேட்பாளர் அருள் (கரும்பு விவசாயி), நியூ ஜெனரேஷன்ஸ் பீப்பிள்ஸ் பார்ட்டி வேட்பாளர் இராவணன் (பானை), அமமுக வேட்பாளர் கார்த்திகேயன் (பிரஷர் குக்கர்), மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் சாதிக்பாட்ஷா (மின் கள விளக்கு) ஆகியோரும், சுயேச்சை வேட்பாளர்கள் அருள் (குடை மிளகாய்),கதிரவன் (மின்கம்பம்), கலைச்செல்வி (விசில்), கலையரசி சரவணன்(ஒலி வாங்கி), கவுதமன் (பலாப் பழம்), சுரேஷ் குமார் (ஏழு கதிர்களுடன் கூடிய பேனாவின் முனை), செல்வராஜு (வைரம்), செல்வம் (ஆட்டோ ரிக்சா), பாலமுருகன் (கிரிக்கெட் மட்டை), பிரகாஷ் (உலங்கு வானூர்தி), புகழேந்தி (வாயு சிலிண்டர்), மணிகண்டன் (தென்னந் தோப்பு), மதியழகன் (டிராக்டர் இயக்கும் உழவன்), முத்தமிழ் செல்வன் (நடை வண்டி), வினோத்குமார் (பட்டாணி) ஆகிய 22 பேர் இறுதிப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

Related Stories:

More
>