×

புகார்கள் மீது அரைமணி நேரத்தில் நடவடிக்கை

தர்மபுரி, மார்ச் 21: தர்மபுரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிக்கும் 90 பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. புகார் பெறப்பட்ட 30 நிமிடத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் கார்த்திகா உத்தரவிட்டார். தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் பொறுப்பு அலுவலர்களுடனான தேர்தல் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கார்த்திகா தலைமை வகித்து பேசியதாவது:

வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட பெறப்பட்ட வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடந்தது. இதைத்தொடர்ந்து வேட்புமனுக்கள் திரும்ப பெறும் பணிகள் நிறைவு பெற்ற பிறகு, இறுதி செய்யப்பட்ட வேட்பாளர்களுக்கு சின்னம் வழங்கப்பட்டவுள்ளது. சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணிகளை தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் படி மேற்கொள்ள வேண்டும். வாக்குப்பதிவின் போது தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து பணியாளர்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. அப்போதே அப்பணியாளர்களுக்கு தபால் வாக்களிக்கும் படிவம் வழங்கப்படவுள்ளது.

தற்போது, மொத்தம் 90 பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர். இக்குழுக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். புகார் பெறப்பட்ட 30 நிமிடங்களில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து பொறுப்பு அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பாக தேர்தல் பணியாற்ற வேண்டும். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் பேசினார்.கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, சப் கலெக்டர் பிரதாப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தணிகாஜலம், முத்தையன், சாந்தி, நாசீர் இக்பால், முதன்மை கல்வி அலுவலர் கீதா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி, கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ராமதாஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் நாராயணன்(பொது), நரேந்திரன்(தேர்தல்) மற்றும் அனைத்து தாசில்தார்களும் கலந்து
கொண்டனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா