×

தர்மபுரி அருகே தேர்தல் புறக்கணிப்பு போராட்ட அறிவிப்பு: பிளக்ஸ் பேனர் வைத்து எதிர்ப்பு

தர்மபுரி, மார்ச் 20:  தர்மபுரி அருகே வாழைத்தோட்டம் கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக ஊருக்குள் நுழையும் இடத்தில் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். பாலக்கோடு அருகே உள்ள எர்ரனஅள்ளி வாழைத்தோட்டம் கிராமத்தில், சுமார் 3000பேர் வசிக்கின்றனர். கிராமத்தின் அருகே ரயில்வே தண்டவாளம் செல்கிறது. பாலக்கோட்டில் இருந்து வாழைத்தோட்டம் கிராமத்திற்கு செல்வதற்கு, ரயில்வே தண்டவாளத்தின் குகை பாலத்தின் ஒரே வழியில் தான் செல்ல வேண்டும். சிறிய அளவில், குறுகலாக உள்ள ரயில்வே பாலத்திற்குள் மட்டுமே கடந்து செல்ல வேண்டி இருப்பதால், பல்வேறு சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மாற்று வழி இல்லாததால், இக்கிராமத்திற்குள் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் வர முடியாத நிலை உள்ளது. எனவே, மாற்று பாதை அமைத்து தரக்கோரி, அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினரிடமும் பலமுறை மனு கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும், யாருக்கும் வாக்களிக்க போவதில்லை எனக்கூறி பிளக்ஸ் பேனர் கிராமத்தின் நுழைவாயிலில் வைத்துள்ளனர்.

இதுகுறித்து கிராமமக்கள் கூறுகையில், ‘பல ஆண்டுகாலமாக எங்கள் கிராமத்திற்குள் செல்ல மாற்றுவழி ஏற்படுத்தி தரும்படி, கேட்டு காலம் காலமாக அவதிப்பட்டு வருகிறோம். கிராமத்திற்குள் இருந்த பள்ளிக்கூடம் இடிந்து விழுந்தது. வாகனங்கள் உள்ளே வர முடியாததால் பள்ளிக்கூடத்தை கட்ட முடியவில்லை. அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போகிறோம். இதை தெரியப்படுத்தும் விதமாக ஊருக்குள் நுழையும் இடத்தில், தேர்தல் புறக்கணிப்பு பிளக்ஸ் பேனர் வைத்துள்ளோம். சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் மனுவாக அளித்துள்ளோம்,’ என்றனர்.

Tags : Dharmapuri ,
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி