×

புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தை வளாகத்தில் தீ விபத்து

சத்தியமங்கலம்,மார்ச்20: புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்கு சொந்தமான நகராட்சி வாரச்சந்தை சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தமிழகத்தில் பொள்ளாச்சி அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சந்தையாக விளங்கும் புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை பொது சந்தையும், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் கால்நடை சந்தையும் நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் வாரச் சந்தை வளாகத்தில் உள்ள குப்பைகளை நகராட்சி பணியாளர்கள் சேகரித்து வாரச்சந்தையில் உள்ள காலி இடத்தில் கொட்டி வைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை காலி இடத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பையில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. மெதுவாக எரிய தொடங்கிய தீ பின்னர் காற்றின் வேகம் காரணமாக வேகமாக பரவத் தொடங்கியது. தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் சுமார் 50 அடிக்கு உயரத்திற்கு கரும்புகை பரவியதை கண்ட பொதுமக்கள் அச்சமடைந்து உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். வாரச் சந்தை வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்குள் தீ பரவ வில்லை.

இதனால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்றாலும் இதுபோல் வாரச் சந்தை வளாகத்தில் உள்ள காலி இடங்களில் குப்பை கொட்டுவதை தவிர்த்துவிட்டு குப்பை தரம் பிரிக்கும் மையத்திற்கு கொண்டு சென்று முறையாக தரம் பிரித்தால் இதுபோல தீ விபத்தை தவிர்க்கலாம் என புஞ்சை புளியம்பட்டி பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags : Punchaipuliyampatti ,Warachchandai ,
× RELATED சத்தியமங்கலம் வாரச்சந்தை வளாகத்தில்...