×

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஏப்.15ல் கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா துவங்குகிறது

மதுரை, மார்ச் 19: மதுரை மாநகரின் மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும்  சித்திரை மாதத்தில் உலகப்புகழ்பெற்ற  சித்திரை திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லாமல் திருவிழா மட்டுமே நடந்தது. ஆனால், இந்தாண்டிற்கான திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக வாஸ்து சாந்தி பூஜை (நிலத்தேவர் வழிபாடு) அதனைத் தொடர்ந்து ஏப்.15ம் தேதி காலை 10.05 மணிக்கு மேல் திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற உள்ளது. அன்று இரவு சுவாமி சிம்ம வாகனத்திலும், அம்மன் விருட்சகம் வாகனத்தில் 4 மாசி வீதிகளில் உலா வருவார்கள். அன்று முதல் நாள்தோறும் அம்மன், சுவாமி, பிரியாவிடை ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வர உள்ளனர்.

முக்கிய நிகழ்ச்சியாக ஏப்.22ம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. மறுநாள் ஏப்.23ல் திக்கு விஜயமும், ஏப். 24ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. ஏப். 25ம் தேதி மீனாட்சி, சுவாமி, பிரியாவிடையின் தேரோட்டம் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லாமல் திருவிழா நடந்தது. இதேபோல் நான்கு மாசி வீதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் சிமெண்ட் சாலைகள் அமைத்து வருவதால் தேர் பவானி நடைபெறவில்லை. வரும் சித்திரை திருவிழாவில் தேரோட்டத்திற்கு சாலைகளை முழுமையாக சீர்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Chithrai Festival ,Meenakshi Temple ,Madurai ,
× RELATED மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு..!!