×

ராமருக்குக் காவலாய் நிற்கும் வியாசராஜர் அனுமன்!

கும்பகோணம் என்று சொன்னாலே, அங்குள்ள கோயில்கள்தான் நம் கண்கள் முன்னே நிற்கும். அப்பப்பா.. எத்தனையெத்தனை கோயில்கள்! `ஆதிகும்பேஸ்வரர்’, `சாரங்கபாணி பெருமாள்’, `சக்கரபாணி பெருமாள்’, `ராமசாமி கோயில்’, `நாகேஸ்வரர்’, `காசி விஸ்வநாதர்’, `சோமேஸ்வரர்’, `கெளதமேஸ்வரர்’, `அபிமுகேஸ்வரர்’, `பானபுரீஸ்வரர்’ இதேபோல், கும்பகோணத்தைச் சுற்றியும் பல கோயில்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானவை, `ஒப்பிலியப்பன் கோயில்’, `திருநாகேஸ்வரம்’ (ராகு ஸ்தலம்), `சூரியனார் கோயில்’, `ஆலங்குடி குரு பகவான் கோயில்’, `திருப்புவனம் கம்பஹரேஸ்வரர் கோயில்’ என பெருமைவாய்ந்த கோயில்கள் கம்பீரத்தோடு தோற்றமளிக்கின்றன.

பெயர் காரணம்

அதுமட்டுமா! கும்பகோணம் என்கின்ற ஊருக்கே தனி பெருமைகள் உண்டு. ஆம்! 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும், தற்போதுள்ள கும்பகோணத்தை `குடமூக்கு’ எனவும் `திருக்குடந்தை’ எனவும் தங்களது பாடல்கள் மூலமாக குறிப்பிட்டுள்ளார்கள். அதேபோல், ஆழ்வார்களில் பெரியாழ்வார், ஆண்டாள், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் `குடந்தை’ என்றும், பூதத்தாழ்வார், `குடமூக்கு’ என்றும் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்கள். காலப் போக்கில், குடமூக்கு என்பது மறுவி, “கும்பகோணம்’’ என மாறி அதுவே நிலைத்தும் விட்டது. மீனாட்சி சுந்தரம்பிள்ளை இயற்றிய “திருக்குடந்தைப் புராணத்தில்’’ 18வது பாடலில், கும்பகோணத்தின் சிறப்புகளை மெய்சிலிர்க்க பாடல் வரிகளாக கூறிவுள்ளார்.

பித்தளை, வெண்கலம், தாமிரம், பாத்திரங்கள், பட்டு, பருத்தித்துணி, சர்க்கரை, ஆகியவை இவ்வூரின் பிரதான தொழிலாகும். அதே போல், உலகிலேயே வெற்றிலை மற்றும் பாக்கு தயாரிப்பதில், கும்பகோணம் முன்னணி வகிக்கிறது. வெற்றிலை இலையின் தரமும், அதன் சுவையும் அலாதியானது.

கும்பகோணம் என்றாலே காபிதான்

தூய்மையான பாலைக் கொண்டு தயாரிக்கப்படும், கும்பகோணம் டிகிரி காபிக்கு, தனி ரசிகர்கள் உண்டு. இன்றும் காரில் நெடுஞ்சாலை வழியாக செல்லும்போது, `கும்பகோணம் டிகிரி காபி’ என்று கடையில் பெயர் பலகை தொங்கவிட்டிருக்கும். அதை படித்தவுடன், நம்மையறியாது கார் அங்கு சென்று நின்றுவிடும். இவ்வளவு ஏன்… கிராமங்களில்கூட இப்போது கும்பகோணம் டிகிரி காபி கடைகள் பெருகிவிட்டன. அத்தகைய பெருமை, கும்பகோணம் டிகிரி காபிக்கு உண்டு. இவைகள் எல்லாத்தையும்விட, கும்பகோணத்தில் 12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறுகின்ற “மகாமக பெருவிழா’’ உலகம் முழுவதும் பிரபலமானது. மகாமகக் குளத்தில் நீராடினால், பாவங்கள் அனைத்தும் போகும் என்று புராணங்கள் உறுதிபட தெரிவிக்கின்றன. அதற்கேற்ப, மகாமகக் குளத்தில் நீராட, உலகம் முழுவதிலும் இருக்கக் கூடிய மக்கள், கும்பகோணத்தில் ஒன்று கூடுவர்.

கும்பகோணம் குறுக்கு சந்துகள்

இத்தகைய பெருமைகளை பெற்ற கும்பகோணத்தில், மத்வ மகான் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த நான்கு அனுமன்கள், பக்தர்களுக்காக அருள்பாலிக்கிறார்கள். ஒன்று, தோப்பு தெருவில் இருக்கக் கூடிய `ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயில்’ உள்ளே. மற்றொன்று, `ஸ்ரீ சக்ரபாணி சுவாமி கோயில்’ உள்ளே கொடிமரத்திற்கு அருகிலும், மேலும் இரண்டு அனுமன்கள், பட்டீஸ்வரம் `ஸ்ரீ கோபிநாதப் பெருமாள்’ கோயிலிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த தொகுப்பில், தோப்பு தெருவில் அமைந்த `ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயில்’ உள்ளே அருள்பாலித்து வரும் அனுமனை பற்றி காணலாம்.

கும்பகோணத்தின் மற்றொரு அழகு, அதன் தெருக்கள் வளைந்து நெளிந்து காணப்படுவதுதான். அப்படிதான் தோப்பு தெருவும் இருந்தது. அங்கு வளையப்பேட்டை அக்ரஹாரத்தில், `ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயில்’ உள்ளது.

அமைதியான அக்ரஹாரம். சர்ர்… சர்ர்… என்று காற்று வீசியது. இவைகளையெல்லாம் ரசித்தவாறே ராஜகோபால சுவாமி கோயில் உள்ளே சென்றோம். நம்மை வரவேற்ற ராஜகோபால சுவாமி கோயில் பட்டர் சுதர்சன், கோயில் சிறப்புகளை ஒவ்வொன்றாக பகிர்ந்துக் கொண்டார்.

அதன் சாராம்சம் என்னவென்றால்,காவலுக்கு அனுமன் இக்கோயிலின் மூலவர் ராமர், சீதை, லட்சுமணர். உற்சவர், ருக்மிணி – சத்யபாமா சமேதரான ராஜகோபாலர். மேலும், மகான் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆஞ்சநேயஸ்வாமியும் சேவை சாதிக்கிறார். முதலில் அனுமனை பற்றி பார்ப்போம்.
வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமன்கள் பெரும்பாலும், ஆற்றோரமாகத்தான் பிரதிஷ்டை ஆகியிருப்பார்கள். இக்கோயில் அருகிலும், காவேரி நதியின் கிளை நதியான “ஹரிசொல்லாறு’’ ஓடுகிறது. இன்று அது மருவி, “அரசலாறு’’ என்றாகிவிட்டது. நதிக்கரை ஓரத்தில் ஆஞ்சநேயசுவாமி பிரதிஷ்டை ஆகியிருப்பதால், இவர் மிகவும் வரப்பிரசாதி.

பொதுவாகவே, ராமர் – சீதை இருந்தாலே அக்கோயிலில் அனுமாரும் இருக்க வேண்டும் என்பது ஆகம விதி. (அல்லது பிரதிஷ்டை செய்யவேண்டும்) எப்படி பிரதிஷ்டை ஆகியிருக்க வேண்டும் என்றால், தனியாக.. தனி சந்நதியாக பிரதிஷ்டை ஆகியிருக்க வேண்டும். அப்படி, இக்கோயிலில் தனி சந்நதியாக அனுமார், பிரதிஷ்டை ஆகியிருக்கிறார். காரணம், ராமர் – சீதைக்காக எப்போதும் அனுமன் காவலுக்கு இருப்பதாக ஐதீகம்.

(இக்கோயில் அடுத்த இதழிலும் தொடரும்…)

ரா. ரெங்கராஜன்

Tags : Vyasarajar Anuman ,Ramar ,Kumbakonam ,`Adikumbeswarar ,`Sarangapani Perumal ,`Chakarapani Perumal ,`Ramasamy Temple ,`Nageswarar ,`Khasi ,`Someswarar ,`Khatameswarar ,`Abimukeswarar ,Kumbakonath ,
× RELATED இந்த வார விசேஷங்கள்