ஸ்ரீரங்கத்தில் இருந்தபோது, ஒருநாள் மழை பெய்ததால் கூரத்தாழ்வார் பிச்சைக்கு செல்ல முடியவில்லை. உண்ண உணவேதும் கிடைக்காததால், பசியால் களைப்பாய் இருந்தார். அந்தச் சமயம் அரங்கனுக்கு இரவு பூஜை மணி அடித்தது. “அரங்கனை நம்பிய தன் கணவனுக்கு உணவில்லையே, அரங்கனுக்கு விதம் விதமாக ஆராதனம். ம். இதுதான் தன் பக்தனை அரங்கன் காப்பாற்றும் அழகு” என ஒருகணம் நினைத்துக் கொண்டாள்.
கூரத்தாழ்வார் மனைவியான ஆண்டாளின் (இந்த ஆண்டாள் வேறு) வருத்தத்தை அறிந்த அரங்கன், தன் அர்ச்சகர்கள் மூலம் தான் அமுது செய்த பிரசாதங்களை ஆழ்வானின் இல்லத்துக்கு அனுப்பிவைத்தார். பிரசாதங்களை எடுத்து வந்த அர்ச்சகர்களைக் கண்டு ஆழ்வார் ஆண்டாளிடம், ‘நீ அரங்கனிடம் குறைபட்டுக் கொண்டாயா?’’ என்று கோபித்துக்கொண்டார். அரங்கனின் அருளால் ஆழ்வானுக்கு இரண்டு குமாரர்கள் அவதரித்தார்கள். அவர்களே வேதவியாச பட்டர் மற்றும் பராசர பட்டர் என்று பிற்காலத்தில் பிரபலமாக விளங்கினார்கள்.
குலச்செருக்கு முதலில் ஒழிய வேண்டும்
ஜாதிச்செருக்கு, பணச்செருக்கு, கல்விச்செருக்கு மூன்றும் முக்குறும்புகள். யாரையும் போக்குக் காட்டி படுகுழியில் தள்ளிவிடும் என்ற நிலைப்பாட்டில் இருந்தவர் கூரத்தாழ்வான். “வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான்” என்று இதனை அமுதனார் ராமனுஜ நூற்றந் தாதியில் பதிவு செய்வார். பராசர பட்டர் சிறுபிள்ளையாக இருந்தபோது நடந்த நிகழ்வு இது. இது அவர் திருத்தாயாரான கூரத்து ஆண்டாளின் ஞானத்தின் மேன்மையை எடுத்துக்காட்டுவது.
ஒருநாள், பட்டர் நீராடி வரும் வழியில், ஏதோ ஒரு அசுத்தமான பொருள் கிடக்க, அதை மிதித்து விட்டார். கால் கழுவிக்கொண்டு வீட்டுக்கு வந்து, தன்னுடைய அன்னையான ஆண்டாளிடம் சொல்லி, அம்மா இப்படி ஒரு பொருளை மிதித்துவிட்டேன். தோஷம் வந்துவிட்டது. என் மனம் அமைதி அடையவில்லை. இதற்கு என்ன பிராயச்சித்தம் செய்வது? இந்த அசுத்தம் எப்படிப் போகும்? ஒரு வழி சொல்லுங்கள்’’ என்று கேட்க, கூரத்து ஆண்டாள் சற்றுநேரம் சிந்தித்துவிட்டு மகனிடம் சொன்னாள்.
மகனே, இதுதான் பிராயச்சித்தம் ‘‘இதோ பாரப்பா, இது எளிதில் மந்திரத்தால் கழிகின்ற தோஷம் அன்று. சாதாரண குலத்தில் பிறந்த ஒரு வைணவ அடியாரின் திருவடி விளக்கிய நீர் (ஸ்ரீ பாத தீர்த்தம்) பெற்றுக்கொள். அதுவே இதற்குப் பிராயச்சித்தம். அவர்களுக்கு குலச்செருக்கு இருக்காது.’’அப்பொழுது தன்னுடைய அன்னையிடம் கேட்டார்.‘‘அம்மா நாமோ அந்தணர்கள் என்று அவர்கள் நினைப்பார்கள்.
நாம் போய் கேட்டாலும் அவர்கள் எப்படி தம்முடைய திருவடியை விளக்குவதற்கு ஒத்துக் கொள்வார்கள்? இது நடைமுறைக்கு சாத்தியமா?’’ என்று கேட்க, அப்பொழுது கூட ஆண்டாள் சொன்ன விடை சிந்திக்கக்கூடிய விடை. வைணவத்தின் தத்துவ மேன்மையை உணர்ந்தவர்கள், செருக்கு இல்லாத உயர்ந்த நிலையில் ஆழ்வாரின் பாசுரத்தை அப்படியே அடியொற்றி வாழ்ந்தார்கள் என்பதை விளக்கும் விடை.
குலம் தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து, எத்தனை
நலம் தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்,
வலம் தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார், அடியார் தம் அடியார் எம் அடிகளே.
என்கின்ற நம்மாழ்வார் பாசுரத்தையும்,
பழுதிலா ஒழுகலாற்று பலசதுப் பேதிமார்கள்,
இழிகுலத்தவர்களேனும்
எம்மடியார்களாகில், தொழுமினீர், கொடுமின்,
கொள்மினென்று, நின்னோடும் ஒக்க,
வழிபட அருளினாய் போல்
மதில் திருவரங்கத்தானே
– என்ற தொண்டரடிபபொடியாழ்வார் பாசுரத்தையும் அவர்கள் அப்படியே வரிக்குவரி பின்பற்றினார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
